சாலைகள் சேதம்,
சாக்கடை அடைப்பு,
சுகாதார சீர்கேடு குறித்து அவசர நடவடிக்கை அவசியம்!
தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சியில், பல்வேறு அடிப்படை வசதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. நகரத்தின் பல சாலைகள் கடுமையாக சேதமடைந்து, பள்ளங்கள் உருவாகி வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தையும் ஆபத்தையும் ஏற்படுத்துகின்றன. குறிப்பாக மழைக்காலங்களில், அந்த பள்ளங்களில் மழை நீர் தேங்கி, இருசக்கர வாகனங்கள் வழுக்கி விழும் அபாயம் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
மேலும், பொதுமக்கள் கொட்டும் குப்பைகள் சரியாக அகற்றப்படாததால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. சாக்கடைகளில் குப்பைகள் அடைப்பு ஏற்படுத்தியுள்ளதால், கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்தப் பகுதி மக்கள் ஆரோக்கிய அபாயத்தில் உள்ளனர்.
அதேபோல், கண்ணாடி கடை மூக்கு பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் வாகன நெரிசல் கடுமையாக உள்ளது. குறுகலான சாலை காரணமாக வாகனங்கள் நெரிசலில் சிக்கி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அந்தச் சாலையை அகலப்படுத்தி போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
மேலும், சின்னமனூரில் முக்கியமான காந்தி சிலை பஸ் ஸ்டாப்பில் அமைக்கப்பட்டுள்ள நிழற்குடை தற்போது சேதமடைந்துள்ளதால், பயணிகள் வெயிலும் மழையிலும் நின்று தவித்து வருகின்றனர். நிழற்குடையை சீரமைத்து பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சின்னமனூர் நகராட்சியின் நிர்வாகம் சாலைகளை சீரமைத்தும், சாக்கடைகளில் உள்ள கழிவுகளை அகற்றியும், சுகாதார சீர்கேடு ஏற்படாதவாறு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு டுடே நாளிதழ் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
செய்தி தொடர்பாளர்: அன்பு பிரகாஷ்
தேனி மாவட்ட தலைமை புகைப்படக் கலைஞர்
தமிழ்நாடு டுடே





