Fri. Aug 22nd, 2025

இந்து மத ஆதரவாளர், சினிமா மற்றும் சின்னத்திரை நடிகர் ரவிச்சந்திரன் மீது புகார் அளித்து மிரட்டுவதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

கடந்த வாரம் நடைபெற்ற நடிகர் சூர்யா அவர்களின் அகரம் அறக்கட்டளையின் பதினைந்தாவது ஆண்டு விழா நிகழ்ச்சியில் பேசிய நடிகரும், மேல் சபை எம்.பி.யுமான கமலஹாசன் அவர்கள் சனாதன சங்கிலிகளை அறுப்பதற்கு கல்வியே சிறந்த வழி என்று வெறுப்பு பேச்சை பேசியுள்ளார்.

அகரம் அறக்கட்டளையின் நிகழ்ச்சியில் கல்வியைப் பற்றியும், சேவை பற்றியும் பேச எத்தனையோ விஷயங்கள் இருக்கும்போது சம்பந்தமே இல்லாமல் திட்டமிட்ட ரீதியில் சனாதன இந்து தர்மத்தை இழிவுபடுத்தி கமல்ஹாசன் பேசியுள்ளார்.

இப்படி தொடர்ந்து இந்து மதத்திற்கு எதிரான கருத்துக்களை பேசி மத வெறுப்புணர்வை கமலஹாசன் அவர்கள் ஏற்படுத்தி வருகிறார்.

நடிகராக மட்டுமல்லாமல் டெல்லி மேல் சபை எம்.பி. ஆக பதவி பிராமாணம் எடுத்ததற்கு எதிராக இதுபோல் பேசியது சட்டப்படி குற்றமாகும். நீதிமன்றம் இதுபோல் மத வெறுப்பை ஏற்படுத்தும் நோக்கில் பேசுபவர்கள் மீது காவல்துறை தாமாக முன்வந்து வழக்கு தொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது. ஆனால் கோடிக்கணக்கான இந்துக்களின் நம்பிக்கையை புண்படுத்திய கமல்ஹாசன் மீது காவல்துறை வழக்கு போடவில்லையே ஏன்? ஆளும்கட்சி ஆதரவில் அவர் மாநிலங்கள் அவை உறுப்பினர் ஆனதாலா?

இது நமது நாட்டின் இறையாண்மைக்கு எதிரான செயலாகும். கமலஹாசன் அவர்கள்  பேச்சை கண்டித்து எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்கூறிய நடிகர் ரவிச்சந்திரன் அவர்களை மிரட்டும் வகையில் காவல்துறையில் புகார் அளித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மிகச் சிறந்த ஆன்மீகவாதியும், தேச பக்தருமான இவர் யாரெல்லாம் இந்து மதத்தை இழிவாக பேசுகிறார்களோ, தேசத்திற்கு எதிரான கருத்தை விதைக்கிறார்களோ அவர்களுக்கு தக்க பதில் கொடுத்து, இந்துக்களின் நன்மதிப்பை பெற்றவர்.

அவர் பேசியதை கண்டித்து அவர் வன்முறையாக பேசுகிறார் என்று சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பொய் புகாரின் பேரில் நடிகர் ரவிச்சந்திரன் மீது காவல்துறை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்பதே இந்து முன்னணியின் கருத்தாகும்.

உலகிலேயே மிக உயர்ந்த கோட்பாடான இந்து மதம் தாங்கி நிற்கின்ற சனாதன சங்கிலிகளை அறுக்க வேண்டும் என பேசிய கமலஹாசன் மீதுதான் வழக்குப் பதிவு செய்ய வேண்டுமே தவிர, நடிகர் ரவிச்சந்திரன் மீது அல்ல என்பதையும் தெளிவு படுத்துகிறோம்.

இந்த நான்கு ஆண்டுகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் இந்து மதத்தையும், இந்து கடவுள்களையும் பலர் இழிவாகப் பேசியுள்ளனர். அவர்கள் மீது இந்து முன்னணி புகார் அளித்துள்ளது.

சென்ற வாரம் கம்பன் கழக பொன்விழாவில் நடந்த நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து, கோடான கோடி மக்கள் வணங்குகின்ற அவதாரபுருஷன் ராமரை புத்திசுவாதீனமில்லாதவர் என இழிவுபடுத்திப் பேசியுள்ளார். இவர் மீது வழக்குப் பாயுமா? என்பதே பெரும்பாலான இந்துக்களின் கேள்வியாக உள்ளது.

திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் சமூக வலைத்தளங்களில் பகவான் கிருஷ்ணரைப் பற்றி மிகவும் கேவலமாக சித்தரித்து செய்தி வெளியிட்டு இருந்தனர். இதற்கு எதிராக ஒரு தனிப்பட்ட நபர் வழக்கு தொடர்ந்து நீதிமன்றம் சென்றதில், திராவிடர் கழகத்திற்கு நீதிமன்றம் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளதை நினைவு படுத்துகிறோம்.

தி.மு.க.வின் சொற்பொழிவாளராக வலம் வரும் இயக்குனர் கரு.பழனியப்பன், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இந்து பெண்கள் பாரம்பரியமாக வழிபட்டு வரும் வரலட்சுமி விரதத்தை கொச்சைப்படுத்தி பேசினார். அவர் மீது வழக்கு தொடுக்கப்படுமா?

இப்படி இந்து மதத்தை தரம் தாழ்த்தி பேசுகின்றவர்களை விட்டுவிட்டு, அதை பொறுத்துக் கொள்ள முடியாமல் எதிர்வினை ஆற்றுபவர் மீது புகார் கொடுத்து மிரட்டுவது கண்டிக்கத்தக்கது.

ஜனநாயக முறையில் தங்களது கருத்துக்களை பதிவு செய்ய அனைவருக்கும் உரிமை உண்டு.

இந்து மதத்தின் சங்கிலிகளை  அறுப்போம் என கமலஹாசன் பேசியது அவரது உரிமை என்றால், இந்து மதத்தை கேவலப்படுத்தும் கமலஹாசனை கண்டித்து கருத்து கூறியது  ரவிச்சந்திரன் அவர்களின் கருத்துரிமையே ஆகும்.

சென்ற ஆண்டு கார்த்திகை மாதத்தில் “ஐயம் சாரி ஐயப்பா” என்று ஐயப்பனை படுகொச்சையாக, பாடல் பாடிய இசைவாணியின் மீது பலர் புகார் கொடுத்தும் கூட அவர் மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மூன்று மாதம் முன்பாக அமைச்சர் பொன்முடி அவர்கள் சைவ – வைணவம் சமய குறியீடுகளை பற்றி ஆபாசமாக திராவிடர் கழக கூட்டத்தில்  பேசினார். அவர் மீது தமிழகத்தில் பல்வேறு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

ஆனால் காவல்துறை அதை முழுமையாக விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளாமல், மிக சாதாரணமான வழக்காக எடுத்துக்கொண்டது.

இப்படியாக இந்து மதத்தை வாய்க்கு வந்த படி அவதூறாக, அநாகரிகமாக வெறுப்புணர்வுடன் பேசுபவர்கள் மீது, எந்த நடவடிக்கையும் இந்த அரசு எடுக்கவில்லை.

மாறாக இந்து மதத்தை இழிவாக பேசுபவர்களை தட்டிக் கேட்கும் பொழுது மட்டும் ஒருதலைப்பட்சமாக இரும்பு கரம் கொண்டு அடக்க நினைக்கிறது அரசு‌. இத்தகைய  இந்து விரோத மனப்பான்மையை காவல்துறையும் தமிழக அரசும் மாற்றிக்கொள்ள வேண்டும்.

நடிகர் ரவிச்சந்திரன் அவர்கள் மீது அளிக்கப்பட்ட புகார் என்பது அவர் மீது பொய் வழக்கு பதிவு செய்ய ஒரு சிலர் எடுக்கும் முயற்சியே. எனவே காவல்துறை அவர் மீது வழக்கு பதிவு செய்யக்கூடாது என கேட்டுக்கொள்கிறோம்.

சின்னத்திரை மற்றும் திரைப்பட நடிகர் ரவி அவர்களுக்கு இந்து முன்னணி என்றென்றும் பக்கபலமாக துணை நிற்கும் என தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்து முன்னணி மாநிலத் தலைவர்

காடேஸ்வரா C. சுப்பிரமணியம்.

தமிழ்நாடு டுடே செய்திகளுக்காக:

R.சுதாகர் – துணை ஆசிரியர்

By TN NEWS