தென்காசி:
மாநில முதல்வர் மீது பொய்யான குற்றச்சாட்டு கூறிய முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் மாவட்ட செயலாளர், வழக்கறிஞர் சிவபத்மநாதன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இடத் தேர்வு விவகாரம்
2009 நவம்பர் 22 அன்று தென்காசி மாவட்டம் அறிவிக்கப்பட்டது. 2020 டிசம்பர் 10 அன்று, அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆயிரப்பேரி ஊராட்சியில், மூன்று குளங்களுக்கு இடையில் அமைந்த காட்டுப்பகுதியில் தேர்வு செய்யப்பட்டது.
பொதுமக்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் அணுக முடியாத, போக்குவரத்து வசதியில்லாத இடம் என்பதால் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தினர். பின்னர் நீதிமன்ற வழக்கின் பிறகு, தற்போது உள்ள இடம் தேர்வு செய்யப்பட்டது.
அனுமதியின்றி அடிக்கல்
2020 டிசம்பர் 10 அன்று, சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதி பெறாமல், அன்றைய ஆட்சியில் அடிக்கல் நாட்டி பணிகள் தொடங்கப்பட்டன. இதேபோல் ராமநதி–ஜம்பு நதி மேல்மட்ட கால்வாய் திட்டமும், வனத்துறை அனுமதி, நிலம் கையகப்படுத்தல், இழப்பீடு வழங்கல் இல்லாமல் தொடங்கப்பட்டதாக குற்றச்சாட்டு விடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலை
திமுக ஆட்சிக்கு வந்தபின், இரு திட்டங்களுக்கும் உரிய அனுமதிகள் பெற்று பணிகள் நடைபெற்று வருவதாக சிவபத்மநாதன் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தென்காசி பொதுக்கூட்டத்தில், 60% நிறைவு பெற்றுள்ள திட்டத்தைப் பற்றிய உண்மை நிலையை மறைத்து தவறான தகவல் கூறியதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
கண்டனம்
“மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ராமநதி–ஜம்பு நதி மேல்மட்ட கால்வாய் திட்டம் உள்ளிட்டவை அதிமுக ஆட்சியில் அனுமதியின்றி தொடங்கப்பட்டன. இவற்றை மறைத்து, பொய் பரப்பும் எடப்பாடி பழனிசாமி பேச்சு தென்காசி மக்களிடம் எடுபடாது” என்று சிவபத்மநாதன் வலியுறுத்தினார்.
ஜோ அமல்ராஜ், தென்காசி மாவட்ட தலைமை நிருபர்