குடியாத்தம், ஆகஸ்ட் 1:
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அம்மனாங் குப்பம் கிராமத்தில் சர்வே எண் 94-ல் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் தற்போது 89 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
பள்ளி வளாகத்திற்கு அருகில் திறந்த வெளியில் பெரிய குட்டை உள்ளது. சமீபத்திய மழையால் இதில் தண்ணீர் நிரம்பியுள்ளது. இந்த குட்டை பள்ளி வளாகத்துக்கு அருகில் இருப்பதால், மாணவ மாணவிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த பிரச்சினையை தீர்க்க மாவட்ட ஆட்சித் தலைவர், கோட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை புகார் மனுக்கள் அளித்திருந்தாலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு திறந்த வெளியில் உள்ள இந்த நீர்நிலை குட்டையை ஆய்வு செய்து உடனடியாக மூடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்
கேவி ராஜேந்திரன்