Tue. Jul 22nd, 2025

கலெக்டரின் உறவினர் எனக்கூறி ரூ.1 கோடி லஞ்சம் பெற்றதாக இன்ஸ்பெக்டர் நெப்போலியன் கைது..?

கன்னியாகுமரி: தமிழக காவல் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவமாக, தர்மபுரியில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த நெப்போலியன் ரூ.1 கோடி லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

நிலம் கையகப்படுத்தல் தொடர்பான வழக்கு
கும்பகோணத்தைச் சேர்ந்த ஆடிட்டர் ரவிச்சந்திரனுக்கு குலசேகரநல்லூரில் 80 சென்ட் நிலம் இருந்தது. இந்த நிலம் அரசு தடுப்பணை கட்டுவதற்காக கையகப்படுத்தப்பட்டது. பின்னர், 30 மரங்களை வெட்டியதாக கிராம நிர்வாக அலுவலர் புகார் அளிக்க, அரசு அதிகாரிகள் மரங்களை கைப்பற்றினர்.

நெப்போலியனின் மிரட்டல் மற்றும் லஞ்சப் புகார்
இந்த விவகாரத்தில் தலையிடுவதாகவும், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரின் உறவினராக இருப்பதாகவும் பொய்யாக கூறிய நெப்போலியன், வழக்கு பதிவு செய்யாமல் தடுக்க ₹1 கோடி லஞ்சம் கோரியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ரவிச்சந்திரன் மூன்று தவணைகளாக ₹1 கோடி வழங்கிய பின்னரும், நெப்போலியன் கூடுதலாக ₹1 கோடி கோரியதை சந்தேகித்த ரவிச்சந்திரன், தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தர்மபுரி டோல் பிளாசா அருகே நெப்போலியனை கைது செய்து, தஞ்சாவூர் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி, தக்கலையில் விசாரணை தீவிரம்
முந்தைய பணியிடங்களில் பண மோசடிகளில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டுள்ளதால், போலீசார் கன்னியாகுமரி, தக்கலை ஆகிய இடங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கன்னியாகுமரியில் நெப்போலியன் இரு குடும்பத்தினருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. அந்த குடும்பத்தினர் பெயரில் சொத்துக்கள் வாங்கி குவித்திருப்பதாக தகவல் கிடைத்ததால், தனிப்படை போலீசார் அந்த வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் தமிழக காவல் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நமது சிறப்பு செய்தியாளர் – கன்னியாகுமரி மாவட்டம்.

By TN NEWS