திருப்பூர், ஏப்ரல் 01: திருப்பூர் மாவட்டத்தில் ரூ.5 கோடி மதிப்புள்ள அரசாண்மை இடம் மீட்கப்பட்டது. திருப்பூர் வடக்கு வட்டம், பி.என்.ரோடு, பிச்சம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள திருப்பூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் (கே.184/5769) கட்டிட வளாகத்தில், சட்டவிரோதமாக தனிநபர்கள் ஆக்கிரமித்து JCB, லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களை நிறுத்தியதாக புகார் எழுந்தது.
மேலும், இவ்வளாகம் சமீப காலமாக சமூக விரோதிகள் கூடாரமாக மாறி, மதுபிரியர்கள் மற்றும் தகாத செயல்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது. இவ்விடத்தை மீட்குமாறு ஈ.பி.அ. சரவணன் முதல்வர் தனிப்பிரிவுக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் புகார் அளித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையின் துரித நடவடிக்கையினால், சட்டவிரோதமாக நிறுத்தப்பட்ட JCB, லாரி உள்ளிட்ட வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு, வளாகத்தின் கதவுகள் பூட்டப்பட்டன. இனிமேல், அங்கு தனியார் வாகனங்கள் நிறுத்தப்பட்டால் அபராதம் விதிக்கப்படுமென காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நடவடிக்கையை மேற்கொண்ட மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல் துறைக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
சரவணக்குமார் – நமது செய்தியாளர்
திருப்பூர் மாவட்டம்.
