Tue. Jul 22nd, 2025

*நெல்லை: வக்ஃப் சொத்து ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடியவர் படுகொலை! -எஸ்டிபிஐ கட்சி கண்டனம்!*
 
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அகமது நவவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

திருநெல்வேலி மாவட்டம் நெல்லை டவுனில், ஒய்வுபெற்ற காவல் அதிகாரியும், முர்த்தின் ஜஹான் தைக்கா முத்தவல்லியுமான ஜாகிர் உசேன் பிஜிலி என்பவர் இன்று அதிகாலை ஒரு கும்பலால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த படுகொலை சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

படுகொலை செய்யப்பட்ட ஜாகிர் உசேன் பிஜிலி, முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் தனிப்பிரிவு பாதுகாப்பு அதிகாரிகள் குழுவில் பணியாற்றியவர் ஆவார். இவர் படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில் முர்த்தின் ஜஹான் தைக்காவுக்கு சொந்தமான 32 செண்ட் வக்ஃப் இடத்தை ஆக்கிரமிக்கும் முயற்சிகளை தடுத்து நிறுத்த சட்டரீதியாக போராடியதே காரணமாகும் என கூறப்படுகிறது.

வக்ஃப் சொத்தை சட்டரீதியாக மீட்கும் முயற்சியில் உள்ள தனக்கு எதிராக ஒரு குழு கொலை திட்டம் மேற்கொண்டு வருவதாக அவர் கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் சமூக வலைதளத்தில் வீடியோ மூலம் அவர் தெரிவித்தார். அவர் வெளியிட்ட அந்த வீடியோவில் யார் யாரெல்லாம் அந்த சொத்தை ஆக்கிரமிக்க முயற்சிக்கிறார்கள், யாரால் தனக்கு அச்சுறுத்தல் என்கிற விவரத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அவருக்கு உரிய பாதுகாப்பை காவல்துறை வழங்காத நிலையில் அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் காவல்துறையின் அலட்சியம் ஏற்புடையதல்ல. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்ச்சியாக கேள்விக்குள்ளாக்கப்படும் நிகழ்வுகள் நடந்தேறி வருகின்றன. இந்த அலட்சியப் போக்கு தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரின் மீதும் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஊர் மக்கள் புகழாரம்:

அருமையான மனிதர், இந்த பகுதியில் உள்ள முத்தவல்லியில் சிறந்த முத்தவல்லி, எல்லோருக்கும் உதவ கூடிய மனிதர், ஏழை மனிதர்களை உம்ராவுக்கு அனுப்பி அழகு பார்த்தவர், சகோதர சமுதாயத்தை சார்ந்த மக்களுக்கும் உதவி செய்ய கூடியவர், இன்னும் ஏழை பெண்களுக்கு இலவசமாக தையல் மிஷின் வாங்கி கற்றுக் கொடுத்தவர், மதரஸாவை நல்ல முறையில் நடத்தி கொண்டு இருப்பவர், பெண்கள் மதரஸா. இன்னும் இலவசமாக ஏழை குழந்தைகளுக்கு டியுசன் சென்டர் இலவசமாக நடத்திக் கொண்டு இருப்பவர். இன்னும் இஸ்லாமிய ஷரிஅத் பள்ளி கூடம் கட்டிக் கொண்டு இருப்பவர். நல்ல முறையில் தொழக்கூடிய மனிதர், திங்கள், வியாழன் இரு தினமும் சுன்னத்தான நோன்பு வைக்க கூடிய மனிதர். எந்த நேரமும் இபாதத் செய்ய கூடிய மனிதர். யார் எந்த நேரத்தில் வந்தாலும் உதவ கூடிய மனிதர். உலமாக்களுடன் எந்த நேரமும் ஆலோசனை செய்து ஒவ்வொரு காரியத்திலும் ஈடுபட கூடியவர். வஃக்ப் சொத்தை பாதுகாக்க தனியாக போரடியவர். இதன் காரணமாக  இன்னுயிர்நீத்தவர்.

நெல்லையில் வக்ப் இடப் பிரச்சனையில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் படுகொலை!
மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை:

நெல்லை மாவட்டம், டவுண் பகுதியில் வசித்து வந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகீர் உசேன் (எ) பிஜிலி பாய் இன்று  அதிகாலை தொழுகை முடித்து வீடு திரும்பும் வழியில் படுகொலை செய்யப்பட்டத்தை மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

இந்த படுகொலைக்குக் காரணமாக வக்ப் இடப் பிரச்சினை உள்ளதாகவும், அதனால் அவரை எதிர் தரப்பினர் கொலை செய்ததாகவும் கூறப்படும் நிலையில், தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என காவல்துறைக்கு எழுத்துப்பூர்வாக புகார் அளித்துள்ள ஜாகீர் உசேனுக்கு உரியப் பாதுகாப்பு அளிக்காமலும், அவரது புகார் குறித்து மேல் நடவடிக்கை எடுக்காமல் அப்பகுதி காவல் உதவி ஆணையாளர் செந்தில் குமார் மற்றும் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணனின் மெத்தனமாகவும், அலட்சியமாகவும் செயல்பட்டுள்ளனர்.

ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள வக்ப் சொத்துக்களை மீட்க ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக இந்த படுகொலை நடைபெற்றுள்ளது.

உயிரிழந்துள்ள ஜாகீர் உசேனின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்குவதோடு, அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என மாண்புமிகு முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.

உயிருக்கு ஆபத்துள்ளது என புகார் அளித்தும் அலட்சியமாகச் செயல்பட்ட உதவி ஆணையாளர் செந்தில் குமார் மற்றும் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் உடனடியாக பணி இடைநீக்கம் செய்து அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை  வேண்டும் எனவும், தமிழ்நாடு முழுவதும் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகி உள்ள வக்ப் சொத்துகளை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு முதலமைச்சரை மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி.

நெல்லையில் கொலை செய்யப்பட்ட பிஜிலி ஜாகீர் உசேன் குடும்பத்தாருடன் தமுமுக மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு!

இன்று 18.3.2025 நெல்லை டவுனில் வக்ஃப் இடம் சம்பந்தமான பிரச்சினையில் படுகொலை செய்யப்பட்ட ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் பிஜிலி ஜாகிர் உசேன் அவர்கள் குடும்பத்தாருடன் தமுமுக மனிதநேய மக்கள் கட்சி நெல்லை மாவட்ட தலைவர் கே.எஸ்.ரசூல்மைதீன் MC தமுமுக மாவட்ட செயலாளர் கோல்டன் காஜா, மாவட்ட பொருளாளர் தேயிலை மைதீன், மாவட்ட துணை செயலாளர்கள் கம்புக்கடை ரசூல், அ.காஜா, வர்த்தகர் அணி மாவட்ட செயலாளர் சேக் மதார், ஊடக அணி மாவட்ட பொருளாளர் அப்பாஸ், டவுண் நகர செயலாளர் நசீர், பொருளாளர் அப்துல்லா, டவுன் M.A.K.நசீர் ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட ஜாகீர் உசேன் மகனிடமும் குடும்பத்தார்களிடமும் ஆறுதல் தெரிவித்தனர்‌. மேலும் அரசுக்கு கோரிக்கை வைத்து ஊடகத்திற்கு மாவட்ட தலைவர் பேட்டி அளித்தார். மேலும் அங்கு நடைபெற்ற  ஆலோசனையில் பங்கு கொண்டனர். இதில் பல்வேறு ஜமாஅத், கட்சி, அமைப்பு, நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தென்காசி மாவட்டம் தலைமை செய்தியாளர் – அமல்ராஜ்.

By TN NEWS