Tue. Jul 22nd, 2025

பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவில் மாசி சிவராத்திரி திருவிழா: பக்தர்கள் கொண்டாட்டம், விசுவாசத்தின் ஊர்வலம்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பிரசித்தி பெற்ற பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவிலில் மாசி சிவராத்திரி திருவிழா சிறப்பாக தொடங்கியது. மூன்று நாள்கள் நடைபெற உள்ள இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, ஒச்சாண்டம்மன் கோவிலின் புகழ்பெற்ற மாசி பெட்டி, பக்தர்களின் ஆரவாரத்துடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

உசிலம்பட்டியில் உள்ள சின்னக்கருப்பசாமி கோவில் முன்பாக இருந்து புறப்பட்ட மாசி பெட்டி ஊர்வலம், ஆபரணங்கள் அலங்கரிக்கப்பட்ட கோடாங்கிகள், மேளதாளக் இசையுடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பாப்பாபட்டிக்குச் சென்றது. அன்னம்பாரிபட்டி, வடகாட்டுப்பட்டி, மேக்கிலார்பட்டி, கீரிபட்டி உள்ளிட்ட பகுதிகளை கடந்து, இரவு நேரத்தில் பெட்டிகள் பாப்பாபட்டி கோவிலுக்கு சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு உசிலம்பட்டி டிஎஸ்பி சந்திரசேகரன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று இரவு, கோவிலில் சிவராத்திரி சிறப்பு பூஜைகள் முடிந்தவுடன், மாசி பெட்டி மீண்டும் நாளை மறுநாள் உசிலம்பட்டிக்கு திரும்பும். அப்போது, பூசாரிகள் ஆனி செருப்பு அணிந்து நடந்து வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குவர். இதனை காண லட்சக்கணக்கான பக்தர்கள் நகரில் திரண்டு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாசி சிவராத்திரி திருவிழா, பக்தி பரவசத்துடன் கோலாகலமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

வீர சேகர் – மதுரை மாவட்டம் செய்தியாளர்.

By TN NEWS