அமைச்சர் பிடிஆர் இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், “பல பத்தாண்டுகளாகவே பார்த்தோம் என்றால் கூட தேசிய அளவில் எங்குக் கல்வி சிறப்பாக இருக்கிறது?, எத்தனை சதவீதம் பேர் படிக்கிறார்கள்? எத்தனை பட்டதாரிகள் உருவாகிறார்கள்? என எந்தவொரு அளவுகோல் எடுத்தாலும் தென்மாநிலங்களும், குறிப்பாகத் தமிழ்நாடு தான் முன்னணியில் இருக்கிறது. தமிழ்நாடு உடன் ஒப்பிடும் போது உத்தரப் பிரதேசம், பீகார், குஜராத் போன்ற மாநிலங்களில் கல்வி பாதி கூட இல்லை. அப்படியிருக்கும் போது அவர்கள் சொல்லும் கொள்கையைத் தான் பின்பற்ற வேண்டும் என்று சொல்வது அதிர்ச்சியாகவே இருக்கிறது. மழலையர் பள்ளியில் இருக்கும் நபர் இளங்கலை படிக்கும் நபருக்குச் சொல்லித் தருவது போலத் தான் இது இருக்கிறது. இரு மொழி கொள்கை தமிழ்நாடு, கேரள மாநிலங்களில் பேரறிஞர் அண்ணா கூறியபடி இரு மொழி கொள்கையே பின்பற்றப்படுகிறது. இதன் காரணமாகவே இந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் சர்வதேச அளவில் முக்கிய வேலைகளில் இருக்கிறார்கள். சர்வதேச கார்ப்ரேட் நிறுவனங்களில் முக்கிய பதவிகளிலும் இருக்கிறார்கள். இரு மொழி கொள்கையால் இதுபோல பல நிறைகள் உள்ளன சர்வாதிகாரம் இதையெல்லாம் தாண்டி அரசியலமைப்பின்படி, மாநில அரசுகளுக்கு சில உரிமை இருக்கிறது.. அதேபோல மத்திய அரசுக்கு என சில உரிமைகள் உள்ளன. இது தவிர பொது பட்டியலில் சில விஷயங்கள் உள்ளன. அதேநேரம் பாலிசி என்பது கொள்கை.. அதாவது ஒரு விருப்பம்.. சட்டப்படி கட்டாயம் என்று இல்லை. அப்படி இருக்கும் பொது கொள்கையை அமல்படுத்தவில்லை என்றால் ஜனநாயகபடி வரவேண்டிய நிதியைத் தர மாட்டோம் என்பது கொடூரமான சர்வாதிகாரி செய்யும் வேலை. நல்லதுதான் நாங்கள் சட்டப்படி நடக்க மாட்டோம்.. மக்கள் வரிப் பணத்தை விருப்பத்தின் அடிப்படையில் வைத்து அரசியல் செய்வோம் என்பதை மத்திய அமைச்சரே சொல்வது ஒரு நல்ல விஷயமாகவே பார்க்கிறேன். அப்போது தான் மக்களுக்கு இவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது தெரியும். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் சரியான கேள்விகளையே எழுப்பியுள்ளார். மத்திய அமைச்சரின் இந்த பேச்சு அரசியலமைப்பிற்கு எதிரானது. மத்திய அமைச்சரின் இந்த பேச்சை நிச்சயம் உச்ச நீதிமன்றமோ அல்லது வேறு நீதிமன்றங்களோ கண்டிக்கும் என்றே நினைக்கிறேன்” என்றார்.