
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகம் முன்பு, திமுக நகர மற்றும் ஒன்றிய கழகத்தின் சார்பில், மத்திய அரசின் பட்ஜெட் மீதான கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைமை செய்தி தொடர்பு குழு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன், மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
“தமிழ்நாட்டுக்கு எய்ம்ஸ் இல்லையா?”
கூட்டத்தில் பேசிய டி.கே.எஸ். இளங்கோவன்,
“மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதாக பிரதமர் மோடி செங்கல் நாட்டி விட்டு சென்றார். ஆனால் அது இன்று வரை கட்டப்படவில்லை. காரணம், ஜப்பானிலிருந்து நிதி வரவில்லை என்பதாம்! ஆனால் அதே நேரத்தில் நாட்டின் ஏழு மாநிலங்களில் எய்ம்ஸ் கட்டி முடித்து விட்டார்கள். தமிழ்நாட்டுக்காரன் மட்டும் இழிச்சவாயன் என நினைக்கிறார்களா?” என்று கேள்வி எழுப்பினார்.
“பாஜக வந்தால் குழப்பம்!”
அவர் மேலும் தெரிவித்ததாவது:
“பாஜக ஒரு கட்சியாக இருக்கலாம். ஆனால் அதன் அடிப்படை கொள்கை மனிதர்களை பிளவை ஏற்படுத்துவதாகும். நாம் சகோதரர்களாக வாழ்ந்து வந்தவர்களாக இருக்க, பாஜக வந்தால் கலவரம் மற்றும் மதசார்பின்மை குறைந்துவிடும் என்பதால்தான் மக்கள் அதை விரும்பவில்லை.”
“திமுக அரசுக்கு மட்டும் மத்திய அரசு நிதி ஒதுக்காமல் இருக்கிறது. தமிழக மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், எங்கள் தேவைகளை உதாசீனம் செய்கிறார்கள். ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆயிரக்கணக்கான கோடி கடன் தள்ளுபடி செய்கிறார்கள். இது மக்களை வஞ்சிப்பது அல்லவா?” என அவர் சாடினார்.
“மக்கள் நலனே திமுக அரசின் இலக்கு”
திமுக அரசு மக்களின் நலனுக்காகவே கல்வி, வேலைவாய்ப்பு, பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து மக்களுக்கும் சமநிலை அரசியலை வழங்க திமுக உறுதியாக செயல்படுகிறது என்றார் டி.கே.எஸ். இளங்கோவன்.
“மத்திய அரசின் துர்நடத்தை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். பாஜக அரசின் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை புரிந்துகொள்ளச் செய்ய வேண்டும்” என்று பொதுமக்களை திரட்டுமாறு அவர் திமுக தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
வீர சேகர் – மதுரை மாவட்ட செய்தியாளர்


