Tue. Jul 22nd, 2025

தெலுங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்கள் வெளியீடு – சமூகநீதி வழியில் தமிழகமும் முன்னேற வேண்டுமென காங்கிரஸ் வலியுறுத்தல்!

ஹைதராபாத்: இந்தியாவின் இரண்டாவது மாநிலமாக, தெலுங்கானா அரசு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொண்டு அதன் விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு, அதன் அடிப்படையில் சமூகநீதி வழங்கும் நடவடிக்கைகளை சட்டப்பேரவையில் விவாதிக்கிறது.

தெலுங்கானா மாநிலத்தில் கடந்த நவம்பர் 6ஆம் தேதி தொடங்கப்பட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பில், 75 கேள்விகள் அடங்கிய ஆய்வின் மூலம் 56.33% பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் உள்ளனர் என்பதை உறுதி செய்யும் வகையில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில், பிகார் மாநிலம் மேற்கொண்டது போலவே, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் இடஒதுக்கீட்டை அதிகரிக்க தெலுங்கானா அரசு திட்டமிட்டுள்ளது.

தெலுங்கானாவில் தற்போது பட்டியலினத்தவர்கள் – 15%, பழங்குடியினர் – 6%, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் – 29%, மற்றும் இஸ்லாமியர் – 4% என மொத்தம் 50% இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மக்கள்தொகை 56.33% உள்ள நிலையில், அவர்களுக்கு குறைவாகவே இடஒதுக்கீடு வழங்கப்படுவதால், அதனை திருத்த அரசாங்கம் முன்வந்துள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வழக்கறிஞர் பிரிவு மாநில துணைத்தலைவர் P.M.சுந்தரமூர்த்தி, இதுகுறித்து பேசும்போது,

“சமூகநீதியை நிலைநாட்டும் செயல்பாடுகளில் தெலுங்கானா அரசு எடுத்துவரும் மாற்றங்கள் வரவேற்கத்தக்கது. ஆனால், சமூகநீதி வழங்குவதாக கூறும் தமிழக அரசு, இன்னும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ள தயாராக இல்லை. இதற்கு எந்த உச்சநீதிமன்ற தடையும் இல்லை. ஆனால், தமிழக அரசு சமூகநீதிக்கு முட்டுக்கட்டை போடுகிறது. தெலுங்கானா வெறும் ₹150 கோடியில் 50 நாட்களில் கணக்கெடுப்பு நடத்த முடிந்தது. இதேபோல், தமிழக அரசு ரூ.300 கோடியில் கணக்கெடுப்பை நடத்தும் திறன் பெற்றிருந்தும் செயல்படவில்லை. தமிழ்நாட்டில் உண்மையான சமூகநீதி நிலைநாட்ட விரும்பினால், உடனடியாக கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.


மு.சேக் முகைதீன்.

By TN NEWS