Tue. Jul 22nd, 2025



புதுச்சேரி:

இந்தியாவில் பல லட்சக்கணக்கான பொதுமக்கள் உடனடி கடன் (Instant Loan App) செயலிகளை பயன்படுத்தி, எந்தவிதமான அடையாளச் சரிபார்ப்பும் இல்லாமல் ரூ.2,000 முதல் ரூ.10,000 வரை கடன் பெற்றுள்ளனர். ஆனால், அவர்கள் வாங்கிய கடன் மற்றும் வட்டித்தொகையை மீறிய பல மடங்கு பணம் செலுத்திய பிறகும், அவர்களது புகைப்படங்களை ஆபாசமாக மாற்றி, நண்பர்கள், உறவினர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரப்புவதாக மிரட்டும் மோசடி கும்பல், இந்தியா முழுவதும் பெரும் அளவில் பணமோசடி செய்துள்ளது.

இவ்வழக்கில், கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ஷரீப் (42) என்பவரை, புதுச்சேரி போலீசார் தியாகராஜன் மற்றும் கீர்த்தி தலைமையிலான தனிப்படை (சிஆர்பிஎஃப்) தலைமையிலான போலீசார் கைது செய்துள்ளனர்.

மல்டிநேஷனல் இணைய வழி மோசடி கும்பல் தொடர்பு:

இந்த மோசடி கும்பல், இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளில் உள்ள இணைய வழி மோசடி கும்பலுடன் தொடர்பு கொண்டுள்ளது. மேலும், கொள்ளையடித்த பணத்தை கிரிப்டோ கரன்சியாக மாற்றி வெளிநாடுகளுக்கு அனுப்பியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆன்லைன் கேம்களில் பணம் வென்றவர்களுக்கு, மோசடியில் கிடைத்த பணம் அனுப்பப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மத்திய அமலாக்கத்துறையின் நடவடிக்கை:

மோசடி மூலம் 465 கோடிக்கு மேல் பணம் சம்பாதிக்கப்பட்டதால், மத்திய அமலாக்கத்துறை (Enforcement Directorate) புதுச்சேரி காவல்துறையிடம் தகவல்களை கோரி விசாரணையை தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, 331 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

மேலும் பலருக்கு தொடர்பு – தீவிர விசாரணை:

கைது செய்யப்பட்ட முகமது ஷரீப்பிடம் இருந்து கிடைத்த தகவலின்படி, இன்னும் பலர் இந்த மோசடியில் தொடர்பு வைத்திருப்பது தெரியவந்துள்ளது. எனவே, புதுச்சேரி காவல்துறை தலைமையகம், முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நாரா சைதன்யா IPS மற்றும் இணைய வழி காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாஸ்கரன் அவர்களின் நேரடி கண்காணிப்பில் விசாரணையை நடத்த உத்தரவிட்டுள்ளது.

மேலும், கேரளாவைச் சேர்ந்த ஒரு பெரிய டிராவல்ஸ் நிறுவனம் இந்த மோசடி வழக்கில் தொடர்புடையதாக இருப்பதால், புதுச்சேரி இணைய வழி போலீசார் கேரளா சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த நிறுவனம் வங்கிக் கணக்குகள், வெளிநாட்டிற்கு அனுப்பிய பயணிகள் விபரங்கள், அந்நிறுவனத்தின் வெளிநாட்டு கிளைகள் போன்ற தகவல்களைச் சேகரிக்க தனிப்படை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

– செய்தி ஆசிரியர்


By TN NEWS