கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு நாளையொட்டி தென்காசி மாவட்டத்தில் உறுதிமொழி எடுத்துக்கொண்ட காவல்துறையினர்
தென்காசி: கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு நாளை முன்னிட்டு, தென்காசி மாவட்டத்தில் காவல்துறையினர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. அரவிந்த் அவர்களின் உத்தரவின்பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. வேணுகோபால் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் கலந்து கொண்டு, கொத்தடிமை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்க உறுதிமொழி எடுத்தனர். அதேபோல், மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் காவல்துறையினர் உறுதிமொழி எடுத்தனர்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, மனிதர்களை வணிகப் பொருளாக பயன்படுத்துவது, வலுக்கட்டாயமாக வேலை சுமத்துவது, கடன் பிணையம் மூலம் கட்டாயப் பணிக்கு வற்புறுத்துவது தண்டனைக்குரிய குற்றங்களாக கருதப்படுகிறது. எனவே, இதை முற்றிலும் ஒழிக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும், எந்தத் தொழிலில் இருந்தாலும் கொத்தடிமைத் தொழிலாளர் முறையை அடையாளம் கண்டு, உரிய நடவடிக்கை எடுக்க முயற்சி செய்வேன் என்றும் காவல்துறையினர் உறுதியளித்தனர்.
மேலும், தொழிலாளர்களுக்கு முன்பணம் வழங்கி வேலைக்குச் சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வலியுறுத்துவேன் என்றும், மீட்கப்படும் கொத்தடிமைத் தொழிலாளர்களுக்கு முழுமையான மறுவாழ்வு அளிப்பதற்காகக் களத்தில் பணியாற்றுவேன் என்றும் உறுதி கூறப்பட்டது.
தமிழ்நாட்டை “கொத்தடிமைத் தொழிலாளர் முறையில்லாத மாநிலமாக” உருவாக்குவதற்கு, கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டத்தை முழுமையாக செயல்படுத்துவோம் என காவல்துறையினர் உறுதிமொழி எடுத்தனர்.

அமல்ராஜ் தென்காசி மாவட்டம் முதன்மை செய்தியாளர்.