ஏவிஎம் புரொடக்சன்ஸ் – தமிழ்த் திரையுலகத்தின் பொற்கால மரபு
காலத்தால் அழியாத தமிழ் திரைப்பட நிறுவனங்களில் முதன்மையானது ஏவிஎம் புரொடக்சன்ஸ். ஒரு காலத்தில் சூப்பர் ஹிட் திரைப்படங்களை தயாரித்து, தமிழ் சினிமாவின் அடையாளமாக விளங்கிய இந்த நிறுவனம், தற்போது திரைப்பட தயாரிப்பில் இருந்து ஓரங்கட்டியிருந்தாலும், அதன் பெருமை இன்று வரை குறையவில்லை.
ஏவிஎம் நிறுவனத்தின் தொடக்கம்
ஏவி மெய்யப்ப செட்டியாரின் தந்தை அவிச்சி செட்டியார், காரைக்குடியில் “ஏவி சன்ஸ்” என்ற டிபார்ட்மெண்டல் ஸ்டோரை நடத்தி வந்தார். அங்கு கிராமஃபோன் ரெக்கார்டுகள் விற்பனை செய்யப்பட்டதை பார்த்த ஏவி மெய்யப்பன், இசைத்துறையில் தனது பங்கு இருப்பதற்கு ஆர்வம் கொண்டார். சென்னை வந்த அவர், நண்பர்கள் நாராயண ஐயங்கார், சுப்பையா செட்டியார் ஆகியோருடன் இணைந்து “சரஸ்வதி ஸ்டோர்ஸ்” என்ற கிராமஃபோன் ரெக்கார்டு நிறுவனத்தை உருவாக்கினார்.
பின்னர், திரைப்பட உலகில் அக்கறை கொண்ட மெய்யப்பன், தனியாக தயாரிப்பில் ஈடுபட்டு சிறு சிறு கதைகளை திரைப்படமாக உருவாக்க தொடங்கினார். ஆனால், இரண்டாம் உலகப் போரால் ஏற்பட்ட குழப்பங்களில், அவர் மீண்டும் காரைக்குடிக்கு திரும்பினார். அங்குதான் தமிழ்த் திரையுலக வரலாற்றில் பொன்னிலக்கியமாக இருக்கும் “ஏவிஎம் புரொடக்சன்ஸ்” நிறுவப்பட்டது. தேவகோட்டை ரஸ்தா அருகே தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், பின்னர் சென்னையில் தனது ஸ்டுடியோவை அமைத்துக் கொண்டு வெற்றி நடை போட ஆரம்பித்தது.
சினிமா உலகில் ஏவிஎம்
ஏவிஎம் நிறுவனம், பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இணைந்து மிகப்பெரிய வெற்றிப் படங்களை வழங்கியது. எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரின் கரியரில் ஏவிஎம் முக்கியப் பங்கு வகித்தது. பல தரமான குடும்பக் கதைகளை மையமாகக் கொண்ட படங்களை தயாரித்து, குடும்பப் பார்வையாளர்களின் ஆதரவைக் பெற்றது.
தற்போதைய நிலை
1979ஆம் ஆண்டு ஏவி மெய்யப்ப செட்டியார் மறைந்த பின், அவரது மகன் சரவணன் நிறுவத்தை சிறப்பாக நடத்தி வந்தார். ஆனால், காலப்போக்கில், சினிமா தயாரிப்பு முறைகள் வணிகமயமாகிப் போனதால், ஏவிஎம் நிறுவனம் திரைப்பட தயாரிப்பில் இருந்து ஒதுங்கியது. அதே நேரத்தில், தற்போது வளர்ச்சி பெற்றுள்ள வெப் சீரிஸ்கள் மற்றும் டிஜிட்டல் மீடியாவில் ஈடுபட தொடங்கியுள்ளது.
தமிழ் திரையுலக வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ள ஏவிஎம், எதிர்காலத்தில் மீண்டும் திரைப்படத் தயாரிப்பில் இறங்குமா என்பதற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
மு.சேக் முகைதீன்