Tue. Jul 22nd, 2025



திருப்பத்தூர் அரசு மருத்துவமனை, அதிநவீன கருவிகளுடன் சிறப்பாக செயல்பட்டு, தமிழகத்தில் பச்சிளம் குழந்தைகளுக்கான சிறந்த சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையாக முதன்மை இடத்தை பிடித்துள்ளது.

இந்த மாவட்டத்தின் தலைமை மருத்துவமனையாக செயல்படும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில், மாதத்திற்கு சராசரியாக 650 பிரசவங்கள் நடைபெறுகின்றன. அதில், குறைமாத குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க 180 குழந்தைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளின் (ரட்டினோபதி – ROP) கண் நோய் கண்டறியப்பட்டு, அதற்கேற்ப லேசர் சிகிச்சை செய்து பார்வையை மீட்டெடுக்கப்படுகிறது. மேலும், வெண்டிலேட்டர் உள்ளிட்ட அதிநவீன சுவாச கருவிகள் மூலம் குறைமாத குழந்தைகளை பாதுகாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு, இந்த மருத்துவமனையில் 1.5 கிலோ எடை குறைவாக 97 குழந்தைகள் பிறந்துள்ளன. அதோடு, 600-700 கிராம் எடை கொண்ட 37 குழந்தைகளும் இதே மருத்துவமனையில் பிறந்து வெற்றிகரமாக சிகிச்சை பெற்றுள்ளன.

இது குறித்து குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் செந்தில்குமார் தெரிவித்ததில்,

“பிறந்தவுடன் மூச்சுத்திணறல், குறைமாதம், ரத்தமாற்று சிகிச்சை உள்ளிட்ட பிரச்சனைகளுக்காக சிறப்பான சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. வேலூர், தருமபுரி மருத்துவக்கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் வழங்கும் அளவிலான மருத்துவ சேவைகள் இங்கு இலவசமாக வழங்கப்படுகின்றன” என தெரிவித்தார்.

பச்சிளம் குழந்தைகளுக்கான சிறந்த மருத்துவ சேவையை வழங்குவதற்காக, தமிழக அரசு இருமுறை சான்றிதழ் வழங்கி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையை பாராட்டியுள்ளது.

Sudhakar – துணை ஆசிரியர்.

By TN NEWS