
தற்சமயம் பெங்களூருவில் ஹெச் எம் பி வி வைரஸ்
இந்தியாவில் முதன் முதலாக நுழைந்திருப்பதாக மீடியாக்கள் சில செய்திகள் வெளியிட்டு பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி வருகின்றன.
இந்த “முதல் தொற்றாளர்” என்பது அச்சமூட்டும் வகையில் பரப்பப்பட்டு வருகிறது.
இந்தியாவில் ஏற்கனவே 2000களில் இருந்தே குளிர்காலத்தில் பரவும் வைரஸ்களான
இன்ஃப்ளூயன்சா
பாரா இன்ஃப்ளூயன்சா
கொரோனா
ரெஸ்பிரேட்டரி சிண்ஸ்டியல் வைரஸ்
அடினோ வைரஸ்
ரைனோ வைரஸ்
இவர்களுடன் சேர்ந்து
ஹியூமன் மெட்டா நியூமோ வைரஸ்
காலங்காலமாக பரவி வரும் வைரஸ் தான்.
இது இந்தியாவுக்கு புதிதன்று. இது ஒன்றும் 2020 ஆம் ஆண்டின் தொடக்கம் போல கொரோனா தொற்றின் முதல் தொற்றாளர் கண்டறியப்பட்டது போல பீதியடைய வேண்டிய விசயமே இல்லை.
இந்தியாவின் முதல் “கண்டறியப்பட்ட” ஹெச்எம்பிவி தொற்று
2003 ஆம் ஆண்டு மஹாராஷ்ட்ராவில் குழந்தைக்கு ஏற்பட்டு ஆய்வில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் முதல் தொற்று என்று கூற இயலாது. காரணம் அதற்கு முன்னமே வைரஸ் தொற்றுப் பரவல் இருந்திருக்கும். ஆனால் அதைக் கண்டறியும் தொழில்நுட்பம் இருந்திருக்காது. அந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட ஹெச்எம்பிவி தொற்று 2003 ஆம் ஆண்டு. 2025 அன்று. இந்தியாவில் ஒருங்கிணைக்கப்பட்ட நோய்கள் கண்காணிப்புத் திட்டம் (INTEGRATED DISEASE SURVEILLANCE PROJECT) பன்னெடுங்காலமாக வழக்கில் இருந்து வருகிறது.
இதன் வழியாக மக்களிடையே பரவும் தொற்று நோய்கள் குறித்த சமிக்ஞைகள் நாள்தோறும் மத்திய மாநில அரசுகளின் சுகாதாரத்துறை கவனித்து வருகின்றன.
இதில் குளிர்காலத்தில் இந்தியாவில் சீதோஷ்ண நிலை காரணமாக மேற்கூறிய சுவாசப் பாதை வைரஸ்கள் பரவுவதும் அதன் மூலம் சளி இருமல் காய்ச்சல் உள்ளடக்கிய சீசனல் வைரஸ் ஜூரம் பரவுவதும் வருடா வருடம் நடக்கும் வாடிக்கையான நிகழ்வாகும்.
பிறகு சீதோஷ்ண நிலை மாற்றம் மற்றும் மக்களிடையே இந்தத் தொற்றுகள் மூலம் பெறப்பட்ட தற்காலிக மந்தை எதிர்ப்பாற்றல் இவற்றின் காரணமாக அந்த வைரஸ்களின் பரவல் குறைந்து விடும். பிறகு மீண்டும் அடுத்த குளிர் காலத்தில்
தன்னகத்தே சில மாற்றங்களை செய்து கொண்டு மீண்டும் மக்களிடையே தொற்று ஏற்படுத்தும். இதில் பெரும்பான்மை மக்களுக்கு அதாவது 90% மேல் உள்ள மக்களுக்கு சாதாரண வைரஸ் காய்ச்சலாக ( சாதாரண என்றால் உயிருக்கு ஆபத்து இல்லாத என்ற அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்) கடந்து செல்லும்.
குழந்தைகள் அதிலும் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகள் அதற்கடுத்து ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் முதியோர்கள்பல்வேறு இணை நோய்கள் இருப்பவர்கள் எதிர்ப்பு சக்தி குன்றச் செய்யும் மருந்துகள் உட்கொள்பவர்களுக்கு இவை சற்று தீவிரத்துடன் வெளிப்படும். இது வருடா வருடம் வாடிக்கையாக நடந்தேறும் விசயம். இதில் சராசரியை விட ஓரிடத்தில் இருந்து
அதிகமான மக்கள் அதிகமான குழந்தைகள் தீவிர தொற்று நிலைக்கு ஆளாவது தெரிந்தால் அதை கண்காணித்து உடனே எச்சரிக்கை சமிக்ஞைகள் கண்காணிப்பு மையங்களுக்கு அனுப்பப்படும்.
அப்படி எச்சரிக்கை சமிக்ஞை அனுப்பும் அளவு – எந்த வைரஸ் தொற்றும் இந்த சீசனில் பரவவில்லை என்கிறது ஐசிஎம்ஆர். எந்த தொற்றும் பொது சுகாதார அவசரநிலையை அடைவதற்கு அது இதுவரை மக்களிடையே பரவாத தொற்றாக இருக்க வேண்டும். காரணம் அதற்குரிய எதிர்ப்பு சக்தி மக்களிடையே இருக்காது.
அடுத்து தீவிரமான தொற்று நிலையையும் மரணங்களையும் அதிகமான மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். இந்த ஹெச்எம்பிவி அப்படிப் பட்ட நிலையை ஏற்படுத்தவில்லை. ஹெச்எம்பிவி என்பது புதிய வைரஸும் இல்லை.
பெரும்பான்மை மக்களுக்கு தீவிர தொற்றை ஏற்படுத்தவும் இல்லை என்பதைப் பதிவு செய்கிறேன். எதிர்ப்பு சக்தி குன்றிய குழந்தைகள்
முதியோர்கள் இவர்களுக்குள்ளும் அனைவருக்கும் அல்ல. அதிலும் ஒரு சாராருக்குத் தீவிர தொற்று ஏற்பட்டு மரணத்தை ஏற்படுத்தும் நோய் தொற்று இது.
இதை கொரோனா பெருந்தொற்று அளவுக்கு எண்ணி அஞ்சுவது மடமையாகும்.நாம் பொதுவாக சுவாசப் பாதை தொற்றுக்கு உள்ளாகும் போது அது தீவிரமானதாக இல்லாதவரை அது எந்த வைரஸால் வந்தது என்ற பரிசோதனையை யாரும் ஆர்டர் செய்வதில்லை. காரணம் சாதாரண வைரஸ் காய்ச்சலுக்கு ஆயிரங்களில் பரிசோதனை செய்யத் தேவை இல்லை. இதுவே தீவிர தொற்றுடன் மருத்துவமனைகளில் அட்மிட் செய்யப்படும் குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு
வந்திருப்பது எந்த வைரஸ் என்பதை அறியும் பரிசோதனைகள் செய்யப்படும்.
அதில் இன்ஃப்ளூயன்சா
ஆர் எஸ் வி
கொரோனா
பாரா இன்ஃப்ளூயன்சா
ஹெச் எம் பி வி
அடினோ வைரஸ்
ஆகிய பல வைரஸ்களையும் பரிசோதித்துப் பார்க்கப்படும்.
இதே போன்று ஐசிஎம்ஆரும் ஆராய்ச்சிக்காக வைரஸ் பேனல் பரிசோதனைகளை இது போன்று தீவிர தொற்றுடன் மருத்துவமனையில் அட்மிட் ஆகும் குழந்தைகளுக்கு செய்யும் போது அதில் ஹெச் எம் பி வியும் இருப்பது தெரிய வந்துள்ளது.
இதைத் தான் மீடியாக்களில் சில “இந்தியாவில் முதல் ஹெச் எம் பி வி” கேஸ் வந்து விட்டது என்று பரப்பி இருக்கின்றனர். இது தவறான செய்தியாகும்.
உங்களுக்கு ஒரு உண்மை சொல்கிறேன்
நீங்கள்… நான்… நம் குழந்தைகள் அனைவருக்குமே நம் வாழ்நாளில் குறைந்தபட்சம் ஒருமுறையேனும் / அதற்கு மேலும் ஹெச்எம்பிவி தொற்று வந்து சென்றிருக்கும்.
அதை நாம் பரிசோதிப்பதில்லை
காரணம் அது சாதாரணமாக நம்மைக் கடந்து சென்று விட்டது என்று அர்த்தம்.
இங்கு நான் இதற்கு முன் இந்தியாவில் ஹெச் எம் பிவி குறித்து செய்யப்பட்ட ஆய்வுகளின் ஆதாரங்களை இறுதியில் சமர்ப்பிக்கிறேன்.
பொதுமக்கள் இந்த விசயத்தில் பீதியடையத் தேவையில்லை.
நன்றி
ஆதாரம்
புதுச்சேரியில் 2024 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஹெச்எம்பிவி ஆய்வு
https://www.sciencedirect.com/science/article/pii/S2772707624001553
சென்னையில் ஹெச்எம்பிவி தொற்று குறித்த ஆய்வு 2016-2018
https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC9151977/
ஜூலை 2003 இல் மஹாராஷ்ட்ராவில் கண்டறியப்பட்ட முதல் ஹெச்எம்பிவி தொற்று குறித்த ஆய்வு கட்டுரை
https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC535278/
2006 இல் டெல்லி எய்ம்ஸ் ஹெச்எம்பிவி ஆய்வு
https://www.sciencedirect.com/science/article/abs/pii/S1386653206002472
நன்றி:
Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை.
தொகுப்பு: சேக் முகைதீன்.

