Thu. Apr 16th, 2026


அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் அமைந்துள்ள விழுப்புரம் மாவட்டம் செஞ்சி காந்திகடை வீதியில், தமிழ் வருடப் பிறப்பை முன்னிட்டு 79ஆம் ஆண்டு இலட்சதீப பெருவிழா சித்திரை மாதம் (ஏப்ரல் 14) முதல் நாளான செவ்வாய்க்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை ஆலய நடை திறக்கப்பட்டு, மூலவர் செல்வ விநாயகருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் வெள்ளி கவசம் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.

மாலை 6 மணியளவில், பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளைக் குறிக்கும் வகையில் மூன்று மண்மடக்கு விளக்குகளில் நெய் நிரப்பி பூஜை செய்து, ஆலய நிர்வாகிகள் இலட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து, பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றும் விதமாக இலட்சக்கணக்கான அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி வழிபட்டனர். வெள்ளி கவச அலங்காரத்தில் காட்சியளித்த விநாயகரை தரிசிக்க பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபாடு செய்தனர்.

இரவு 10 மணியளவில் உற்சவ விநாயகர் பல்வித மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, வண்ணமயமான மின்விளக்குகளால் ஒளிவீசும் ரதத்தில் மங்கள மேள வாத்தியத்துடன், வானவேடிக்கைகளுடன் வீதி உலா புறப்பட்டார்.

விழாவை முன்னிட்டு ஐயப்ப சேவா சங்கம் மற்றும் பெரிய அகரம் இளைஞர்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. செஞ்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செஞ்சி பெரிய அகரம் ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் நிர்வாகக் குழுவினர், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

விழுப்புரம் மாவட்ட முதன்மை செய்தியாளர்: தமிழ். மதியழகன்

By TN NEWS