Mon. Apr 13th, 2026

கன்னியாகுமரி மாவட்டம்:

கன்னியாகுமரி அருகே மகாதனாபுரத்தில் இன்று (11.04.2026) மாலை 3.00 மணியளவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில், தவெக தலைவர் விஜய் பல முக்கிய வாக்குறுதிகளை அறிவித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

நலத்திட்டங்களை பெற மக்கள் லஞ்சம் கொடுக்க வேண்டிய அவசியமே இல்லாத நிலை உருவாக்கப்படும். அரசுத் திட்டங்கள் நேரடியாக மக்களின் வீட்டு வாசலிலேயே வழங்கப்படும் வகையில் புதிய நிர்வாக முறை அமல்படுத்தப்படும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒருங்கிணைந்த டிஜிட்டல் பதிவு உருவாக்கப்பட்டு, அனைத்து நலத்திட்டங்களையும் ஒரே செயலி மூலம் பெறும் வசதி ஏற்படுத்தப்படும்.

“தமிழ்நாடு சேவை உரிமைச் சட்டம்” கொண்டு வரப்பட்டு, “வெற்றி தமிழ்நாடு சூப்பர்” எனும் செயலி அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், நிதி மற்றும் பட்ஜெட் தகவல்கள் பொதுமக்களுக்கு எளிதாக புரியும் வகையில் வெளிப்படையாக வெளியிடப்படும் என கூறினார்.

இடைத்தரகர் மற்றும் லஞ்ச முறைகள் முற்றிலும் ஒழிக்கப்படும் என்றும், அரசுத் திட்டங்கள் நேரடியாக மக்களை சென்றடையும் வகையில் கட்டமைப்பு மாற்றம் செய்யப்படும் என்றும் உறுதியளித்தார். நிதிப்பற்றாக்குறையை காரணமாகக் காட்டும் திமுக ஆட்சிமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்த அவர், மக்கள் வெறும் வாக்காளர்கள் அல்ல; ஆட்சியின் பங்காளர்கள் என்ற நிலைக்கு மாற்றம் செய்யப்படும் என வலியுறுத்தினார்.

மேலும், மக்கள் கருத்துகளை பெற தனி டிஜிட்டல் தளம் உருவாக்கப்படும். தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு மையமாக மேம்படுத்தப்பட்டு, சேலம், திருச்சி உள்ளிட்ட நகரங்களில் AI புத்தாக்க மையங்கள் நிறுவப்படும் என்றும் தெரிவித்தார்.

5 லட்சம் கையெழுத்துகளுடன் பெறப்படும் மனுக்கள் சட்டப்பேரவையில் கட்டாயமாக விவாதிக்கப்படும் என்றும், மக்களின் கோரிக்கைகளை பெற சட்டப்பேரவையில் தனியாக ஒரு நாள் ஒதுக்கப்படும் என்றும் அறிவித்தார்.

இறுதியாக, கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து விஜய் உரையை நிறைவு செய்து அங்கிருந்து புறப்பட்டார்.

செய்தி: ஷாலு V. J, கன்னியாகுமரி (தமிழ்நாடு டுடே)

By TN NEWS