Tue. Mar 24th, 2026

மார்ச் 19 | வேலூர் மாவட்டம்

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு வட்டம், பேரணாம்பட்டு கிராமத்தில் நிலம் தொடர்பான பிரச்சனை காரணமாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பதற்றத்தை தொடர்ந்து, வருவாய் கோட்டாட்சியர் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

பேரணாம்பட்டு கிராமத்தில் சர்வே எண் 499/2, பரப்பளவு 0.10.00 ஏர்ஸ், புஞ்சை வகைப்பாட்டில் பட்டா எண் 6369-ல் “இஷ் ஆதுல் ஹஸ்நாத் மதரஸா பள்ளி” என்ற பெயரில் நிலம் பதிவாக உள்ளது.

இந்நிலையில், அந்த மதரஸாவைச் சேர்ந்தவர்கள் மார்ச் 18ஆம் தேதி மாலை சுமார் 3 மணியளவில், இடத்தில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிக்காக JCB இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அருகிலுள்ள சர்வே எண் 499/1A பகுதியில் வசிக்கும் இந்து ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், சர்வே எண் 499/2 பகுதியில் தங்களுக்கு 20 அடி அகலத்தில் வழி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

ஆனால், அவர்களுக்கு ஏற்கனவே 52 அடி அகலத்தில் பாதை வசதி இருப்பதாகவும், கூடுதலாக கோரப்பட்ட 20 அடி வழிக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்கள் எதுவும் விசாரணையில் வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனால் ஏற்பட்ட தகராறு நிலையை சமாதானப்படுத்தும் பொருட்டு, குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று, இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

மேலும், இரு தரப்பினரும் தங்களிடம் உள்ள ஆவணங்களுடன் அடுத்த நாள் காலை குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி அறிவுறுத்தியதன் பேரில், அங்கிருந்த அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர்.

இந்த நிகழ்வில் முஸ்லிம் தரப்பில் சுமார் 300 பேர் மற்றும் ஆதிதிராவிடர் தரப்பில் சுமார் 40 பேர் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்



By TN NEWS