Fri. Mar 13th, 2026

குடியாத்தம் | மார்ச் 12

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி மற்றும் வட்டாட்சியர் சந்தோஷ்குமார் ஆகியோரிடம், வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

50 ஆண்டுகளாக வசித்து வரும் மக்கள்…!

குடியாத்தம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மோர்தானா ஊராட்சியில் உள்ள ஜங்காலபள்ளி கிராமத்தில், நத்தம் சர்வே எண் 261/1 பகுதியில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பல குடும்பங்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனர். ஆனால் அந்த இடத்திற்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.

பல ஆண்டுகளாக மனுக்கள்….?

தாங்கள் வசித்து வரும் இடத்திற்கு பட்டா வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக வருவாய் துறையிடம் மனுக்கள் அளித்து வருவதாகவும், குறிப்பாக 18.08.2023 அன்று மோர்தானா கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் நிகழ்ச்சியிலும் மனு அளித்ததாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர். இருப்பினும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர்கள் குற்றம்சாட்டினர்.

விரைவாக பட்டா வழங்க கோரிக்கை…!

எனவே, பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் வீடுகளுக்கு அரசு உரிய வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியரிடம் மீண்டும் கோரிக்கை மனு அளித்தனர்.

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர்
கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS