Fri. Mar 6th, 2026

கோவை, மார்ச் 6:
கடந்த பிப்ரவரி 10, 2026 அன்று உடல் ஊனமுற்ற இளைஞர் ஒருவர் கருணை கொலை செய்ய அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த சம்பவம் தமிழ்நாடு டுடே பத்திரிக்கையில் வெளியாகி சமூகத்தில் பெரும் கவனத்தை பெற்றது.

இந்த செய்தி வெளியாகியதன் எதிரொலியாக, கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் செயல்பட்டு வரும் கவிதாலயா பவுண்டேஷன் அமைப்பின் தலைவர் திருமதி கவிதா சுரேஷ் மனிதநேயத்துடன் முன்வந்து அந்த இளைஞருக்கு உதவிக்கரம் நீட்டினார்.

கருணை கொலை கோரிய சரண் தீப் (23) என்ற உடல் ஊனமுற்ற இளைஞருக்கு காப்பகத்தில் அடைக்கலம் வழங்கி, அவருக்கு பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கடந்த திங்கட்கிழமை அவர் காப்பகத்தில் சேர்க்கப்பட்டதன் மூலம் அவருக்கு புதிய மறுவாழ்வு கிடைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அம்பேத்கர் மக்கள் விடுதலை கழகம் நிறுவனர் மற்றும் தலைவர் ரங்கநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மனிதநேய உதவி செய்த கவிதாலயா பவுண்டேஷன் தலைவர் கவிதா சுரேஷ் அவர்களுக்கும், சமூகப் பொறுப்புடன் செய்தியை வெளிக்கொண்டு வந்த தமிழ்நாடு டுடே நிருபர் வேலுமணி அவர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

மேலும் தமிழ்நாடு டுடே நிருபர் வேலுமணி மற்றும் தமிழ்நாடு டுடே குழுவினருக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன், அவர்களின் சமூகப் பணி தொடர்ந்து சிறக்க வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.


நமது சிறப்பு நிருபர்

கோவை மாவட்டம்

By TN NEWS