Thu. Mar 5th, 2026

கோவை:
தமிழ்நாடு அச்சு ஊடக உரிமை சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினசரி, வார மற்றும் மாத இதழ்களில் பணிபுரியும் பத்திரிகையாளர்களுக்கு அடையாள அட்டை, நலவாரிய உறுப்பினர் அட்டை, பேருந்து பயண அட்டை வழங்க வேண்டும் என்பதுடன், அரசு தொடர்பான முக்கிய செய்திகளை மறுக்காமல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும், கோவை மாவட்டத்தில் இருந்து வெளிவரும் தினசரி, வார மற்றும் மாத இதழ்களில் பணிபுரியும் நிருபர்களுக்கு பொது தொடர்பு அலுவலர் (PRO) அடையாள அட்டை வழங்க மறுத்து வருவதாகவும், பலமுறை நேரடியாக முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் சங்கத்தினர் குற்றம்சாட்டினர்.

அத்துடன், பத்திரிகையாளர்களை செய்தியாளர் குழுக்களில் இணைக்காமல் இருப்பது, முக்கிய அரசு செய்திகள் மற்றும் நிகழ்வுகளை வழங்காமல் தவிர்ப்பது, வார மற்றும் மாத இதழ் நிருபர்களுக்கு செய்தி சேகரிப்பில் தடைகள் ஏற்படுத்தப்படுவது போன்ற பிரச்சினைகளையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இதனை கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு அச்சு ஊடக உரிமை சங்கத்தின் மாநிலத் தலைவர் குமார் பாபு, மாநிலச் செயலாளர் வேலுமணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை முன்வைத்தனர். பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக மனு அளித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டதால், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாடு டுடே கோவை மாவட்ட செய்தியாளர்.

By TN NEWS