Thu. Mar 5th, 2026

கேரளா, மார்ச் 3:
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற சக்தி தலமான ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் இன்று நடைபெற்ற ஆற்றுக்கால் பொங்கலா திருவிழாவில் லட்சக்கணக்கான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். பெண்கள் மட்டுமே பெருமளவில் கலந்து கொள்வதால் இக்கோயில் “பெண்களின் சபரிமலை” என அழைக்கப்படுகிறது.

வரலாறு மற்றும் புராணக்கதை

புராணங்களின்படி, மதுரையை எரித்த பிறகு கண்ணகி கேரளா வழியாக கொடுங்கல்லூர் சென்றபோது, திருவனந்தபுரம் அருகிலுள்ள ஆற்றுக்கால் பகுதியில் ஓய்வு எடுத்ததாக கூறப்படுகிறது. அந்த இடத்தில் கண்ணகியின் அம்சமாக பகவதி அம்மன் அருள்பாலிக்கிறார் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

மேலும், முல்லாட்டுவீட்டில் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கிள்ளி ஆற்றைக் கடக்க உதவி கேட்ட சிறுமி பின்னர் காணாமல் போயதாகவும், அந்த சிறுமி கனவில் தோன்றி தன்னுக்காக ஆலயம் அமைக்கச் சொல்லியதாகவும் கூறப்படுகிறது. அதன்படி அந்த இடத்தில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் கட்டப்பட்டது.

பொங்கலா திருவிழா

மலையாள மாதமான கும்பம் (பிப்ரவரி–மார்ச்) மாதத்தில் நடைபெறும் 10 நாள் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பொங்கலா விழா கொண்டாடப்படுகிறது.
மதுரையை எரித்த பின் கண்ணகி ஆற்றுக்கால் பகுதியில் ஓய்வெடுத்ததாகக் கூறப்படும் ஐதீகத்தை நினைவுகூர்ந்து, அம்மனை வரவேற்கவும் அம்மனின் பசியை போக்கவும் பெண்கள் பொங்கல் வைத்து வழிபடுகின்றனர்.

இன்றைய விழா நிகழ்வுகள்

இன்று (03.03.2026) காலை 9.45 மணிக்கு கோயிலின் பெரிய பண்டார அடுப்பில் கோவில் மேல் சாந்தி (போற்றி) தீபத்தை ஏற்றிய பின்னர், பக்தர்கள் பொங்கல் அடுப்புகளை ஏற்றி வழிபாட்டை தொடங்கினர்.

பின்னர் மதியம் 2.15 மணிக்கு அம்மனுக்கு மேல் சாந்தி நிவேதியம் செய்யப்பட்டதையடுத்து, திருவிழா சடங்குகள் நிறைவடைந்தன.

பக்தர்கள் திரளான வருகை

கேரளா மாநிலம் முழுவதும் மட்டுமின்றி தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர்.

திருவனந்தபுரம் நகரம் முழுவதும் —
ஆற்றுக்கால் கோவில், கிள்ளிப்பாலம், கரமன, கிழக்கே கோட்டை, பத்மநாபசாமி கோவில் கிழக்கு மற்றும் மேற்கு வாசல், கேரளா தலைமைச் செயலகம் உள்ளிட்ட பகுதிகளில் — எங்கு பார்த்தாலும் பெண் பக்தர்களின் கூட்டம் காணப்பட்டது.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

விழாவை முன்னிட்டு கேரளா காவல்துறையினர் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். மேலும் தீயணைப்பு துறை, பொதுப்பணித்துறை மற்றும் கேரளா குடிநீர் வாரியம் உள்ளிட்ட துறைகள் இணைந்து பக்தர்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் வசதிகளை செய்து வைத்திருந்தன.

பெரும் திரளான பக்தர்கள் வருகையையொட்டி கேரளா மாநிலத்திற்கு இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

தமிழ்நாடு டுடே
திருவனந்தபுரம் செய்தியாளர்: ஷாலு V. J

By TN NEWS