
பத்திரிகை அறிக்கை வெளியீடு
பிரதமர் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தி அவதூறு பரப்ப முயன்ற சதி முறியடிக்கப்பட்டதாக, இந்து முன்னணி மாநிலத் தலைவர் இந்து முன்னணி சார்பில் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்ட பத்திரிகை அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் தேசத்தின் மரியாதை காப்பாற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நடந்த சம்பவம் குறித்து குற்றச்சாட்டு
அறிக்கையில் கூறியிருப்பதாவது, நேற்று பாராளுமன்றத்தில் பிரதமர் வருவதற்கு முன்பாக காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் பிரதமர் நரேந்திர மோடி வருகை வழியிலும் அவரது இருக்கை அருகிலும் பதாகைகள் ஏந்தி குழுமி நின்றது சந்தேகத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சபை ஒழுங்கு விதிகளின்படி, சபை தொடங்கும் நேரத்தில் உறுப்பினர்கள் பிறரின் இருக்கை அருகே செல்லக்கூடாது என்பதே மரபு எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சபாநாயகரின் முன்எச்சரிக்கை
இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு, பாராளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா அவர்கள் முன்எச்சரிக்கையாக பிரதமர் அவைக்கு வருவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டதாகவும், இல்லையெனில் பாராளுமன்ற வரலாற்றில் கரும்புள்ளி ஏற்பட்டிருக்கும் எனவும் இந்து முன்னணி தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் தலைமையின் நடத்தை குறித்து விமர்சனம்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த பத்து ஆண்டுகளாக பாராளுமன்ற நடைமுறைகளை சீர்குலைத்து வருவதாகவும், முன்னர் சபையில் பிரதமரின் இருக்கை அருகே சென்று கட்டிப்பிடித்த சம்பவம், குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தங்கர் குறித்து கேலி செய்த நிகழ்வுகள் உள்ளிட்டவை எடுத்துக்காட்டாக குறிப்பிடப்பட்டுள்ளன.
வெளிநடப்பு மற்றும் செயல்பாடுகள் சந்தேகம்
இரண்டு நாட்களாக காங்கிரஸ் தலைவர் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததும், அவர்களின் செயல்பாடுகளும் சந்தேகத்திற்கிடமானதாக இருந்ததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் மீது நடந்ததாக கூறப்படும் முந்தைய சம்பவங்களையும் சுட்டிக்காட்டி, இத்தகைய செயல்கள் பாராளுமன்ற பாதுகாப்பை மீண்டும் பரிசீலிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.
கடுமையான விசாரணை கோரிக்கை
இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தி, சதியில் ஈடுபட்டவர்கள் மற்றும் உடந்தையர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. பாராளுமன்ற பாதுகாப்பு மற்றும் நடத்தை விதிகளை மேலும் கடுமையாக்கி, எந்த தயவு தாட்சணமும் இன்றி அமல்படுத்த வேண்டும் என்றும் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தேசத்தின் இறையாண்மை மீது தாக்குதல் என கண்டனம்
இந்த சம்பவம் நாட்டின் இறையாண்மைக்கு எதிரான தாக்குதலாக கருதப்படுவதாகவும், இதனை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிப்பதாகவும் பத்திரிகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதாகர் ஆர்.,
Sub Editor,
Tamilnadu Today
