Tue. Jan 13th, 2026

 

போகிப் பண்டிகை என்பது வெறும் கொண்டாட்ட நாள் அல்ல; அது இயற்கை, மனிதன், விவசாயம், உடல்நலம் ஆகிய அனைத்தையும் ஒன்றாக இணைக்கும் நமது முன்னோர்களின் அறிவியல் வாழ்வியல்.

சாஸ்திர நம்பிக்கைகளின் படி, போகி நாளில் முன்னோர்கள் இல்லங்களுக்கு வருவார்கள் எனக் கருதப்படுகிறது. அதனால் அவர்களுக்குப் பிடித்த உணவுகளைப் படைத்து, தேங்காய், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், புத்தாடைகள் வைத்து தீப ஆராதனை செய்து வணங்கும் வழக்கம் தொன்றுதொட்டு இருந்து வந்தது. இது கடந்த தலைமுறைகளுக்கு நன்றி சொல்லும் ஒரு பண்பாட்டு மரபாகவும் விளங்கியது.

பொங்கலுக்கு முன் காப்புக்கட்டுதல் – பாதுகாப்பின் அடையாளம்.

பொங்கலிடுவதற்கு முன், வீட்டின் வாசலில்
வேப்பிலை, பீளைப்பூ, ஆவாரம்பூ போன்ற மூலிகைச் செடிகளைக் கொண்டு “காப்புக்கட்டுதல்” செய்யும் வழக்கம் இருந்தது.

இந்தக் காப்புக்கட்டுதல்,

தீய சக்திகளைத் தடுக்க பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் நோய்களைத் தவிர்க்க இல்லத்தையும் தொழிலிடத்தையும் பாதுகாக்க என்ற பல அடுக்கான நோக்கங்களைக் கொண்டது.

மேலும், விவசாய சமூகத்தில் விளைநிலங்களின் நான்கு திசைகளிலும் “காப்பு வளைத்தல்” செய்து நில எல்லைகளை அடையாளப்படுத்தினர். இதன் மூலம் பயிர்களுக்கும் விவசாயிகளுக்கும் பாதுகாப்பு கிடைத்தது.

வயல்விழாவாக இருந்த போகி விவசாயத்தின் அடையாளம்.

வயலும் அதனைச் சார்ந்த பகுதிகளும் மருதநிலம் என அழைக்கப்படுகிறது.
மருதநிலத்தின் கடவுள் இந்திரன். இந்திரனுக்கான மற்றொரு பெயர் “போகி”.
போகி என்றால் மகிழ்ச்சியானவன் என்று பொருள்.

விளைநிலங்களின் கடவுளை வணங்கி,பசி,பிணி,பகை நீங்க வேண்டும் என்றும்,சம்பா, குறுவை, தாளடி என்ற முப்போகத்திலும் நல்ல விளைச்சல் கிடைக்க வேண்டும் என்றும் முற்காலத்தில் போகி, வயல்விழாவாக கொண்டாடப்பட்டது. காலப்போக்கில் நகரமயமாக்கலால், அதே போகிப் பண்டிகை இன்று வாசல்பொங்கலாக மாறியுள்ளது.

காப்புக்கட்ட பயன்படுத்தப்பட்ட ஐந்து மூலிகைகள்

முற்காலத்தில் காப்புக்கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டவை

1. ஆவாரம்பூ

2. பீளைப்பூ

3. வேப்பிலை

4. தும்பை செடி / துளசி

5. நாயுறுவி செடி

ஆனால் காலப்போக்கில், குறிப்பாக நகரங்களில்,
இந்த ஐந்து மூலிகைகளில் ஆவாரம்பூ, பீளைப்பூ, வேப்பிலை
என்ற மூன்றே பயன்பாட்டில் இருந்து, இன்றைக்கு அந்த மரபே பல இடங்களில் மறக்கப்பட்டு வருகிறது.

மருத்துவ அறிவின் அடிப்படையில் காப்புக்கட்டுதல்.

நமது முன்னோர்கள் தேர்ந்தெடுத்த ஒவ்வொரு செடியும் மருத்துவக் குணம் கொண்டவை:

ஆவாரம்பூ – உடல் வெப்பத்தை கட்டுப்படுத்தும்
வேப்பிலை – காற்றிலுள்ள கிருமிகளை அழிக்கும் கிருமிநாசினி
மாவிலை – உடல் களைப்பை நீக்கும்
சிறுபீளை – நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
தும்பை – தலைவலியைப் போக்கும் தன்மை கொண்டது
துளசி – காற்றை சுத்தப்படுத்தி உடலும் மனதும் ஆரோக்கியமாக இருக்க உதவும்

இந்த மூலிகைகளை ஒன்றாக சேர்த்து
வீட்டு வாசற்படிகள், நான்கு மூலைகள், தொழில் செய்யும் இடங்களில்
காப்புக்கட்டியது,
ஒரு பண்பாட்டு முன்னெச்சரிக்கை மருத்துவ முறையாக இருந்தது.

மாட்டுப் பொங்கலன்று,
இந்த மூலிகைகளை மாடுகளுக்கு மாலையாக அணிவித்து வணங்கியதும்
மனிதன் – கால்நடை – இயற்கை
மூன்றுக்கும் இடையிலான உறவை வெளிப்படுத்துகிறது.

பொது விழிப்புணர்வு வேண்டுகோள்

நாகரிகம் என்ற பெயரில்,நமது அறிவுசார்ந்த பாரம்பரியங்களை இழப்பது நமது வேர்களை மறப்பதற்குச் சமம்.

👉 ஒவ்வொரு இல்லமும்
👉 ஒவ்வொரு தொழிலிடமும்
👉 தெரிந்த மூலிகைச் செடிகளை ஒன்றாக சேர்த்து
காப்புக்கட்டுதல் போன்ற மரபுகளை மீண்டும் கடைபிடிக்க வேண்டும்.

👉 குழந்தைகளுக்கு இதன் அறிவியல், மருத்துவ, பண்பாட்டு காரணங்களை விளக்க வேண்டும்.
👉 போகிப் பண்டிகையில், கடந்த கால நன்மைகளுக்கு நன்றி சொல்லி,
இயற்கையுடன் இணைந்த வாழ்வை நினைவுகூர வேண்டும்.

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🌾🙏

பாரம்பரியத்தைப் பாதுகாப்போம் – ஆரோக்கியத்தைப் பேணுவோம்.

ஷேக் முகைதீன்.

By TN NEWS