Sat. Jan 10th, 2026

நாகர்கோவிலில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் தடம் எண் 505 அரசுப் பேருந்து, நிர்ணயிக்கப்பட்ட வழித்தட விதிகளை மீறிச் செயல்பட்டதாகப் புகார் எழுந்ததைத் தொடர்ந்து, அந்தப் பேருந்தின் ஓட்டுநர் பணியிடை நீக்கம் (Suspend) செய்யப்பட்டுள்ளார்.

இந்தப் பேருந்து கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை–2 பணிமனையைச் சேர்ந்ததாகும். வழக்கமாக இப்பேருந்து வள்ளியூர் ஊருக்குள் சென்று பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும்.

ஆனால், மாலை நேர ஓட்டத்தில், ஓட்டுநர் பேருந்தை வள்ளியூர் ஊருக்குள் கொண்டு செல்லாமல், புறவழிச் சாலை (Bypass) வழியாக இயக்கியதாகக் கூறப்படுகிறது.

இதனால், வள்ளியூர் பேருந்து நிலையத்தில் நீண்ட நேரமாக பேருந்துக்காகக் காத்திருந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இச்சம்பவம் தொடர்பாக, பொதுமக்கள் மற்றும் பயணிகள் தரப்பில் மேலதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.

புகார்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்,

நிர்ணயிக்கப்பட்ட வழித்தடத்தில் பேருந்தை இயக்காதது
பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியது
என்பவை உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 05.01.2026 அன்று குழித்துறை–2 பணிமனையைச் சேர்ந்த அந்த ஓட்டுநர் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அரசுப் போக்குவரத்து கழகம்,

“புறவழிச் சாலையில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகள், கட்டாயமாக அந்தந்த ஊர் பேருந்து நிலையங்களுக்குள் சென்று வர வேண்டும். இதனை மீறும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்”
என ஏற்கனவே அறிவுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சம்பவம், வழித்தட விதிகளை மீறும் ஊழியர்களுக்கு ஒரு கடும் எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.

அமல்ராஜ்
தென்காசி மாவட்டம் | தலைமை செய்தியாளர்

By TN NEWS