Sat. Jan 10th, 2026

ரூ.3,000 கொடுத்தால் தான் மின் இணைப்பு? – விவசாயிகள் குற்றச்சாட்டு…!

கள்ளக்குறிச்சி மாவட்டம் | சின்னசேலம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள தோட்டப்பாடி வடக்கு காட்டுகொட்டாய் பகுதியில் அமைந்துள்ள மின் டிரான்ஸ்ஃபார்மர் எரிந்து பழுதடைந்த நிலையில், அதை சரிசெய்ய எடுத்துச் சென்ற மின்சாரத் துறை அதிகாரிகள் 4 நாட்கள் கடந்தும் இதுவரை டிரான்ஸ்ஃபார்மரை மீண்டும் பொருத்தி மின்விநியோகம் வழங்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

டிரான்ஸ்ஃபார்மர் பழுதடைந்ததையடுத்து, அந்த பகுதியில் முழுமையாக மின்விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால், விவசாய பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, பாசனத்திற்கு மின் மோட்டார்கள் இயங்காததால், நெல் பயிர்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் வாடி கருகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும், மின்தடை காரணமாக கால்நடைகளுக்கும் தண்ணீர் கிடைக்காத சூழல் உருவாகி உள்ளது. இதனால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பணம் கொடுத்து தண்ணீர் வாங்கி கால்நடைகளுக்கு வழங்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ரூ.3,000 கொடுத்தால் தான் மின்சாரம்?

இதற்கிடையே, அந்த பகுதியில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்திடமும் ரூ.3,000 வழங்கினால் தான் டிரான்ஸ்ஃபார்மரை சரிசெய்து மின்விநியோகம் செய்யப்படும் என மின்சாரத் துறை அதிகாரிகள் கூறி வருவதாகவும், இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இது அரசு சேவையை பணமாக மாற்றும் செயல் என குற்றம்சாட்டும் விவசாயிகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உயர்நிலை விசாரணை நடத்தி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

உடனடி நடவடிக்கை கோரிக்கை:
டிரான்ஸ்ஃபார்மரை உடனடியாக சரிசெய்து மின்விநியோகம் வழங்க வேண்டும் என்றும், விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் பணம் கேட்கப்பட்டதாக கூறப்படும் புகாரில் மின்சாரத் துறை உயரதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

V. ஜெய்சங்கர்
தமிழ்நாடு டுடே
மக்கள் தொடர்பு அதிகாரி
கள்ளக்குறிச்சி மாவட்டம்

By TN NEWS