தென்காசி,
தென்காசி மாவட்டம் குத்துக்கல் வலசை பகுதியில் இயங்கி வரும் நெல்லை கருப்பட்டி காபி கடையில், டீ கப்பை திருடிச் சென்றதாக இன்ஸ்டாகிராம் பிரபலம் திருச்சி ரவுடி பேபி சூர்யா மற்றும் அவரது கணவர் சிக்கா என்ற சிக்கந்தர் மீது கடை உரிமையாளர்கள் புகார் அளித்துள்ளனர்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, குறித்த நபர்கள் காரில் வந்து டீ குடித்ததாகவும், டீ குடித்த பிறகு டீ கப்பை திருப்பி அளிக்காமல், ஒரு கையால் காரை இயக்கியபடியே டீ குடித்துக்கொண்டே காரை ஓட்டி சென்றதாகவும் கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர். இது கடுமையான விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் செயல் என்றும் கூறினர்.
மேலும், இந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து, கடை உரிமையாளர்களை தரக்குறைவாக பேசியும் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடை உரிமையாளர்களிடையே கடும் அதிர்ச்சியையும், மனவேதனையையும் ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, கடை உரிமையாளர்கள் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்து,
தங்களது கடையில் டீ கப்பை திருடிச் சென்ற நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,
இது முதல் முறை அல்ல, இரண்டாவது முறையாக இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளனர் என்றும்,
பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் டீ குடித்துக்கொண்டே காரை இயக்கிய செயல் மீது கடுமையான நடவடிக்கை தேவை என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், இத்தகைய செயல்களில் யாரும் ஈடுபடக் கூடாது என்பதற்காக பொது விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும் என புகாரில் தெரிவித்துள்ளதாக கடை உரிமையாளர்கள் கூறினர்.
அமல்ராஜ்
தென்காசி மாவட்டம் தலைமை செய்தியாளர்.
