டிசம்பர் 24:
வேலூர் மாவட்டம், குடியாத்தம் – அம்பாபுரம் கொச அண்ணாமலை தெருவில், பூட்டியிருந்த வீட்டில் 5 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீட்டின் உரிமையாளர், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை கஸ்தூரிபாய் (வயது 75). இவரது கணவர் ஹரிதாஸ் கடந்த ஆண்டு உயிரிழந்த நிலையில், கஸ்தூரிபாய் தற்போது ஜவஹர்லால் தெருவில் உள்ள மற்றொரு வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.
இதன் காரணமாக, கொச அண்ணாமலை தெருவில் உள்ள வீட்டிற்கு அவ்வப்போது வந்து செல்வது வழக்கம்.
கொள்ளை நடந்தது எப்படி?
வழக்கம்போல், நேற்று முன்தினம் கஸ்தூரிபாய் கொச அண்ணாமலை தெருவில் உள்ள வீட்டிற்கு சென்றபோது,
வீட்டில் இருந்த பீரோ திறக்கப்பட்டு,
துணிமணிகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் மற்றொரு அறையைத் திறந்து பார்த்தபோது, அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த பொருட்களும் சிதறி கிடந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து அவர் குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீஸ் விசாரணை:
புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் பொறுப்பு – சிவசங்கரன்
மாவட்ட எஸ்பி தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் – சரவணன்
ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும்,
மோப்ப நாய் ‘சாரா’ வரவழைக்கப்பட்டு வீட்டிற்குள் சோதனை நடத்தப்பட்டது. மோப்ப நாய் சிறிது தூரம் ஓடியபோதும் யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை.
கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கதவுகள், பீரோக்கள் உள்ளிட்ட பகுதிகளில் தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
முதற்கட்ட விசாரணை தகவல்
முதற்கட்ட விசாரணையில்,
வீட்டின் பின்புற கால்வாய் வழியாக வந்த திருடன்,
பின்புற மாடியில் இருந்த கம்பிகளை உடைத்து வீட்டிற்குள் புகுந்து,
இரண்டு பீரோக்களை உடைத்து, அதிலிருந்த 5 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றது தெரிய வந்துள்ளது.
மேலும்,
துணிகளின் அடியில் இருந்த 4 பவுன் நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்கள் அப்படியே இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
திருடன் வீட்டில் இருந்த பித்தளை பாத்திரங்களை சாக்குப் பையில் கட்டி எடுத்துச் செல்ல முயன்றதும், எடையைத் தூக்க முடியாமல் அவற்றை அங்கேயே விட்டுச் சென்றதும் தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
✍️ குடியாத்தம் தாலுகா செய்தியாளர்
கே.வி. ராஜேந்திரன்

