14 வயது சிறுமியை தவறான செயல்களில் வற்புறுத்திய வழக்கு: இரு பெண்களுக்கு 7 ஆண்டு சிறை
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், 14 வயது சிறுமியை சட்டத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபட வற்புறுத்தியதாக குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, இரு பெண்களுக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் POCSO நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக, சிட்டாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை வழக்கு பதிவு செய்தது. கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு முன் ஒரு வருட காலமாக, செஞ்சி பகுதியில் இயங்கிய காலணி விற்பனை கடையில் பணியாற்றி வந்த 14 வயதிற்குட்பட்ட சிறுமியை, குற்றவாளிகள் சட்டத்திற்கு முரணான செயல்களில் ஈடுபட வற்புறுத்தியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டது.
வழக்கின் விசாரணையை செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி ராஜகுமாரி மேற்கொண்டார். விசாரணை முடிவில் குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, விழுப்புரம் POCSO நீதிமன்ற நீதிபதி திருமதி வினோதா, குற்றவாளிகளான ராணி (39) மற்றும் நாகம்மாள் (49) ஆகியோருக்கு தலா ஏழு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
விழுப்புரம் மாவட்ட ஒளிப்பதிவாளர் கே மாரி.
