Tue. Dec 16th, 2025



முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி

தர்மபுரி, டிசம்பர் 15 :

“தகுதி உள்ள மகளிர் யாரேனும் இன்னும் விடுபட்டிருந்தால், அவர்கள் கோரிக்கை வைத்தால், அவர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை நிச்சயமாக வழங்கப்படும்,” என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி அளித்தார்.

திமுக தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. பி. பழனியப்பன் அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று பேசினார். அவர் பேசியதாவது:

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் இதுவரை 1 கோடி 13 லட்சம் மகளிருக்கு தொகை வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக 17 லட்சம் சகோதரிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இன்னும் தகுதி இருந்தும் விடுபட்டவர்கள் இருப்பின், அவர்கள் உடனடியாக விண்ணப்பித்தால், அவர்களுக்கும் உரிமைத் தொகை நிச்சயமாக வழங்கப்படும்.

தமிழகம் இன்று ஜிடிபி வளர்ச்சியில் “நம்பர் ஒன்” மாநிலமாக உருவெடுத்துள்ளது. இது நாங்கள் கூறும் அறிக்கை அல்ல; இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கை என முதலமைச்சர் குறிப்பிட்டார்.

பல தடங்கல்கள் மற்றும் சோதனைகளை கடந்து, இந்த ஆட்சி இன்றைக்கு பல்வேறு சாதனைகளை படைத்துள்ளதாக அவர் கூறினார்.
எஸ்.ஐ.ஆர். பணிகளை திமுகவினர் சிறப்பாக முன்னெடுத்து வருவதை அனைவரும் பெருமையுடன் பார்க்கிறார்கள். வாக்குரிமையை பாதுகாக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அதே நேரத்தில் அரசின் சாதனைகளை வீடு வீடாக சென்று எடுத்துச் சொல்லி, ஓட்டுகளாக மாற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த பி. பழனியப்பன், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோதும், கண்ணியத்துடனும் ஜனநாயக மரியாதையுடனும் செயல்பட்டவர் என புகழாரம் சூட்டினார்.
“பழனியப்பன் பேசும்போது, யாரும் வெளியே செல்ல வேண்டாம்; உட்கார்ந்து கேளுங்கள் என்று நான் சொல்வேன்,” என முதலமைச்சர் நினைவுகூர்ந்தார்.

இந்த திருமண விழாவில்
அமைச்சர்கள் பன்னீர்செல்வம், சாமிநாதன், சக்கரபாணி, சுப்பிரமணியன், ராஜேந்திரன்,
விடுதலைச் சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன்,
தர்மபுரி எம்.பி. மணி,
பாலக்கோடு டவுன் பஞ்சாயத்து தலைவர் முரளி,
மேற்கு மாவட்ட பொருளாளர் முருகன்,
திமுக மாநில வர்த்தக அணி துணைச் செயலர் சத்தியமூர்த்தி,
அரூர் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் தென்னரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிறைவாக, மாவட்ட செயலாளர் பி. பழனியப்பன் நன்றி உரையாற்றினார்.

மண்டல செய்தியாளர்
D. ராஜீவ் காந்தி

By TN NEWS