Tue. Dec 16th, 2025

 

✍️ சிவராஜ், குக்கூ காட்டுப்பள்ளி.

இயற்கை வேளாண் அறிவியக்கவாதி நம்மாழ்வர் பங்கேற்ற நிகழ்வொன்றில், கல்லூரி மாணவர்களுடன் இணைந்து நாம் கண்ட ஒரு ஆவணப்படம் – எண்டோசல்ஃபான் நஞ்சின் கொடிய விளைவுகளைச் சொன்னது.

ஒரு பூச்சிக்கொல்லி எவ்வாறு ஒரு முழு கிராமத்தின் வாழ்க்கையையே சிதைக்கிறது என்பதை அந்தப் படம் கொடுமையாகக் காட்சிப்படுத்தியது.
அந்த ஆவணப்பட முடிவில், நேர்காணல் கொடுத்த அனைவருமே இன்று உயிருடன் இல்லை – எண்டோசல்ஃபான் நஞ்சால் மரணித்தவர்கள் என்பதை அறிந்த தருணம்…
அய்யா நம்மாழ்வர் மாணவர்கள் முன் குரல் நடுங்கி அழுதார். அந்தக் காட்சி இன்றும் மனதில் ஈரமாகவே இருக்கிறது.

அன்றே,

“எண்டோசல்ஃபான் நஞ்சுக்கு எதிராக தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு பயணம்செய்வோம்”
என்று முடிவு செய்யப்பட்டது.

அதன்பின் நகரந்தோறும் கூட்டங்கள்…
எழுத்தாளர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் என பல்துறை அறிஞர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு மேடைகள்.

அந்த வரிசையில், கோவையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில்தான்-
“நிகமானந்தா” என்ற பெயரை முதன் முதலாகக் கேட்டோம்.

மார்க்சிய அறிஞர் எஸ்.என். நாகராஜன் அப்போது சொன்ன அந்த ஒரு வாக்கியம் –

“தண்ணீரைக் காப்பாற்ற ஒரு மனிதன் 114 நாள் உண்ணாவிரதமிருந்து, அணு அணுவாக வலியோடு செத்துப்போனான்”
என்றது…
முழுக்கூட்டமே உறைந்துபோன தருணம் அது.

அன்றிரவு முதலே நாங்கள் அவரைப் பற்றி அறிந்துகொண்டோம்.

கங்கை காப்பாற்ற உயிர் நீத்த துறவி…!

நிகமானந்தா:
கங்கை நதிக்கரையிலுள்ள தொழிற்சாலைகள் நதியை மாசுபடுத்துவதைத் தடுக்க வலியுறுத்தி,
114 நாட்கள் உண்ணாநோன்பிருந்து உயிர்தியாகம் செய்தவர்.

தனது உயிரையே போராட்ட கருவியாக மாற்றி,

“நீர் காப்பாற்றப்பட வேண்டும்! இது நம் எல்லோரின் பொறுப்பு!”
என இந்த சமூகத்திற்கே அறைகூவல் விடுத்த இறையுள்ளம்.

அந்த தியாகத்தின் தாக்கமே…
இன்று பல உயிர்களுக்குத் தண்ணீராக மாறிக்கொண்டிருக்கிறது.

நிகமானந்தாவின் கனவைச் சுமந்த மங்கலம் – மதுமஞ்சரி:

அந்த தியாகத்தின் கடைசி மூச்சை இதயத்திற்குள் ஏந்தி குக்கூ நிலத்திற்கு வந்தவள் –
மதுமஞ்சரி.

கட்டிடக்கலை பொறியியல் முடித்து, பல நகரங்களில் பணிபுரிந்தவள்.
ஒருநாள் குக்கூ காட்டுப்பள்ளியில் நடந்த ஒரு சந்திப்பு இன்று ஒரு நீர்ப்புரட்சியாக மாறியது.

“முதலில் காலால் நட, பிறகு சைக்கிளில் போ, பிறகு டவுன் பஸ்ஸில் போ… கிராமங்களைக் கண்டு உனக்கு தோன்றும் பணியை செய்”
என்று சொல்லப்பட்ட அந்த வார்த்தைகளே அவளை தண்ணீரின் பாதையில் நடத்தின.

ஒரு மலைக்கிராமத்தில் தண்ணீருக்கான அவலம் –
அவளது வாழ்வின் திசையை மாற்றியது…?

“ஊர்க்கிணறு புனரமைப்பு இயக்கம்” – 15 கிணறுகள்… நூற்றுக்கணக்கான உயிர்கள்:

மதுமஞ்சரியின் செயற்பாடுகள் இன்று:

✅ மலை முதல் சமவெளி வரை
✅ 15 கிணறுகள் முழுமையாகத் தூர்வாரப்பட்டு மீட்பு
✅ கிராம மக்களிடம் ஒப்படைப்பு
✅ உயிர்த்தெழுந்த ஊர்தாகம்

கிணற்றின் அளவெடுப்பு முதல்
ஆழத்தில் கல் அகற்றி நீர்க்கண்ணைத் திறப்பது வரை
அவள் நேரடியாக களத்தில்.

முதன்மையான நீர்;
ஊரின் குலதெய்வ பாதத்தில் ஊற்றப்பட்ட அந்த நொடி…
அவளது விழிகளில் வழிந்தது வெறும் நீர் அல்ல…
நிகமானந்தாவின் கனவுகளின் தொடர்ச்சி!

களத்தில் இறங்கிய கட்டிடக்கலைஞர் – மைக்கேல்

மைக்கேல் –
முன்னணி கட்டிடக்கலைஞர்களிடம் பயின்றவர்.

ஆனால் இன்று:
✅ கழிப்பறை கட்டுகிறார்
✅ நூற்பு தொழிற்கூடம் அமைக்கிறார்
✅ நெசவுப் பள்ளி
✅ ஈரோடு லட்சுமண ஐயர் விடுதி

எல்லாவற்றையும் அர்ப்பணிப்பு – செய்நேர்த்தி – தீவிரம் கலந்த உழைப்பால்.

இன்று மைக்கேலும்
குக்கூவின் உயிர் உறுப்பினர்களில் ஒருவர்.

மணமல்ல… ஒரு இயக்கத்தின் துவக்கம்!

மதுமஞ்சரி – மைக்கேல்
இவர்கள் இணையராக இணையும் நிகழ்வு:

🗓 30 நவம்பர் 2025, காலை 8 மணி
📍 அந்தியூர் – எழுதியமரத்தையன் கோவில் வனம்

இந்த நிகழ்வு – வெறும் திருமணம் அல்ல…!

✅ பழங்குடி குடும்பத்திற்கு கன்றுக்குட்டிகள்
✅ பெண்ணுக்குப் தையல் இயந்திரம்
✅ கோவில் சூழலில் குறுங்காடு உருவாக்கும் இயக்கம்
✅ “விதைக் காப்பகம்” – பாரம்பரிய விதைகள் மீட்பு

🌾 விதைச் சுழற்சி திட்டம்:

200 விவசாயிகளுக்கு தலா 2 கிலோ விதை

அறுவடைக்கு பிறகு 4 கிலோ திருப்பிச் செலுத்தல்

அடுத்த தலைமுறைக்கும் விதை… விதையாக வேரூன்றும்.

நிகமானந்தாவின் உயிர் – இன்று நம் கையில் நீராக!

தண்ணீருக்காக உயிர் தந்த ஒரு துறவியின் கனவு…
இன்று கிணறுகளாக, விதைகளாக, காடுகளாக, குழந்தைகளின் தாகமாக மீட்கப்படுகிறது.

இந்த இணையேற்பு
ஒரு குடும்பத்தின் விழாவல்ல – ஒரு இயக்கத்தின் அடுத்த அதிகாரம்!

🙏
மதுமஞ்சரி – மைக்கேல்
இவர்களின் வாழ்வு
நம் அனைவரின் எண்ணத்தில் விதைத்த அன்பால்
இன்னும் சிறப்புற்று வளர வாழ்த்துகிறோம்.

வாழ்த்துக்கள் 💐💐💐💐

ஷேக் முகைதீன்

இணை ஆசிரியர்.

By TN NEWS