சென்னை:
17 ஆண்டுகளாகக் காத்திருந்த சென்னை மக்களின் கனவு, வேளச்சேரி–பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டம், இறுதியாக நனவாகியுள்ளது. ரூ. 730 கோடி மதிப்பீட்டில் நீட்டிக்கப்பட்ட இந்த ரயில் வழித்தடத்தில் தண்டவாளம் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. மின்மயமாக்கல் உள்ளிட்ட இறுதி பணிகளும் கிட்டத்தட்ட நிறைவு பெற்றுள்ளதால், டிசம்பர் மாதத்திலேயே பறக்கும் ரயில் சேவை தொடங்க உள்ளது.
இந்தத் திட்டம் 2008ம் ஆண்டு ரூ.495 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது. 2013க்குள் முடிக்க திட்டமிடப்பட்டிருந்தாலும், ஆதம்பாக்கம்–தில்லை கங்கா நகர் பகுதியில் நிலக் கையகப்படுத்தல் பிரச்சனை காரணமாக வேலைகள் பல ஆண்டுகள் நிறுத்தப்பட்டன. பின்னர் உச்ச நீதிமன்றம் தலையிட்டபின் பணிகள் மீண்டும் தொடங்கின.
பணிகள் வேகமடைந்த விதம்:
சுமார் 5 கிலோமீட்டர் நீளப் பகுதியில், வேளச்சேரியிலிருந்து பரங்கிமலை வரை தண்டவாளம் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மின்சாரம் வழங்கும் அமைப்பும் சிக்னல் இணைப்புகளும் முடிந்துள்ளன. சில நாட்களுக்கு முன் சரக்கு ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. வேளச்சேரியிலிருந்து பரங்கிமலை வரை 12 பெட்டிகள் கொண்ட முழுநீள ரயில் இயக்கம் சோதனைக்காக நடத்தப்பட்டது.
அடுத்தடுத்த படிகள்:
மின்சார இயக்கம், சிக்னல் அமைப்பு, பாதுகாப்பு சோதனை ஆகியவை வெற்றிகரமாக முடிந்துள்ளன. விரைவில் பயணிகள் ரயில்களுக்கான சோதனையும் நடைபெறும். அதன் பின்னர் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அனுமதி அளித்தவுடன் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை மக்களின் கனவு திட்டம்:
வேளச்சேரி, பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியதும், ஐடி நிறுவனங்கள் அமைந்துள்ள ஓஎம்ஆர் மற்றும் பெருங்குடி, தரமணி பகுதிகளுக்குச் செல்லும் மக்கள் போக்குவரத்து சிரமமின்றி எளிதாகச் செல்ல முடியும். இதனால் போக்குவரத்து நெரிசலும் குறைந்து, நேரச் சேமிப்பும் அதிகரிக்கும்.
சென்னை, தாம்பரம், செங்கல்பட்டு பகுதிகளின் மக்களுக்கு இது உண்மையான “பறக்கும் கனவு நனவாகும் நாள்” ஆகும்.
செய்தி: ஷேக் முகைதீன்
இணை ஆசிரியர்
