காஞ்சிபுரம்:
வாலாஜாபாத் அவலூர் பாலம் மூடல், 20 கிராமங்கள் தொடர்பு துண்டிப்பு! பொதுமக்கள் அவதி!
காஞ்சிபுரம் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு, வாலாஜாபாத் – அவலூர் தரைப்பாலத்தில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் பருவமழை தொடங்கியதால் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு நீர்நிலைகளில் தண்ணீர் வர தொடங்கியுள்ளது. இது மட்டும் இல்லாமல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பாலாறு மற்றும் செய்யாறு ஆகிய ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகின்றன. பாலாறு மற்றும் செய்யாறு ஆகிய ஆறுகளுக்கு ஜவ்வாது மலை மற்றும் ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் பெய்த மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பாலாறு பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதன் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் இருந்து அவலூர் செல்லும் தரைப்பாலம் முற்றிலுமாக வாகன போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. வாலாஜாபாத் பாலாற்றில் 15,000 கன அடி நீர் செல்வதால் வாலாஜாபாத்தில் இருந்து அவலூர் மற்றும் அங்கம்பாக்கம், கம்பராஜபுரம், தம்மனூர், இளையனர் வேலூர், காவாந்தண்டலம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த பாலத்தில் கனரக வாகனங்கள் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் என அனைத்து விதமான வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் தடைபட்டிருப்பதால் வாகனங்களில் இந்த பாலத்தை கடக்க வேண்டுமென்றால், 30 கிலோமீட்டர் சுற்றிச் செல்ல வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
வாலாஜாபாத் மற்றும் 20க்கும் மேற்பட்ட கிராமங்களை இணைக்கக்கூடிய மிக முக்கிய பலமாக இந்த பாலம் இருந்து வருகிறது. இந்த பாலத்தை பயன்படுத்தி தான், தொழிற்சாலைக்குச் செல்லும் ஊழியர்கள், கட்டுமானம் மற்றும் உள்ளிட்ட தொழிலில் ஈடுபடும், கூலி தொழிலாளர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாதிப்படைந்துள்ளனர். பாலத்தில் வாகனங்கள் செல்லாத வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
பெ லோகநாதன்,
காஞ்சீபுரம் மாவட்ட செய்தியாளர்
