Thu. Nov 20th, 2025



குடியாத்தம், அக்.27:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் லோகேஷ் (21), வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுக்கா செதுக்கரை தபால் நிலையத்தில் தபால் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

நேற்று குடியாத்தம் பொன்னம்பட்டி பகுதியில் வசிக்கும் அஜய் குமார் என்பவருக்கு பதிவு அஞ்சல் ஒன்றை வழங்க லோகேஷ் சென்றுள்ளார்.

அப்போது பதிவு அஞ்சல் ரசீதில் கையொப்ப வேறுபாடு இருப்பதை லோகேஷ் கவனித்ததாகவும், அதுகுறித்து அஜய் குமாரிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆத்திரம் அடைந்த அஜய் குமார், தபால் ஊழியர் லோகேஷை கை, கால் கட்டி, அவரது வாயில் மது ஊற்றி, சரமாரியாக தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவரிடமிருந்த செல்போனும் தபால்களும் பறிக்கப்பட்டன என கூறப்படுகிறது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த சக தபால் ஊழியர்கள் குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் புகார் செய்தனர். காவல்துறை சம்பவ இடத்திற்கு சென்று லோகேஷை மீட்டு, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது.

கடுமையாக காயமடைந்த லோகேஷ் தற்போது குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குடியாத்தம் தபால் ஊழியர் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

🖋️ குடியாத்தம் தாலுகா செய்தியாளர்: கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS