
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம் நெற்குணம் கிராமத்தில் திருப்பனிசந்துறை நாயனார் கோவிலில் உள்ளது. இக்கோவில் மிகவும் சிதைவுற்று தற்போது எஞ்சிய கட்டடங்களை . முழுவதுமான அகற்றிவிட்டு மீண்டும் கோவிலை நிர்மாணிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அப்படி தரை தளத்தினை சமன் செய்யும் போது துர்கை புடைப்புச் சிற்பம் கண்டறியப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் சிங்கார உதியன் தலைமையில் விழுப்புரம் வீரராகவன், பா. கார்த்திகேயன், மு.அன்பழகன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இந்த எண்தோளி என்றழைக்கப்படும் கொற்றவைச் (துர்கை ) சிற்பம் கி.பி. 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலப்புடைப்புச் சிற்பம் என்றும் கண்டறியப்பட்டது.
இச் சிற்பமானது மிகவும் நேர்த்தியாகச் செதுக்கப்பட்டுள்ளது. இதனை சிற்பக் கலையின் உச்சம் என்று கூட கூறலாம்.
இப்புடைப்புச் சிற்பத்தைப் பற்றி கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் சிங்கார உதியன் கூறியதாவது –
இந்தக் கொற்றவை 48 அங்குல உயரமும், 27 அங்குல அகலமும் கொண்ட நீள் கோள பலகைக் கல்லில் எட்டு கரங்களுடன் புடைப்புச் சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது.
பலகைக் கல்லின் மேல்புறத்தை அழகிய நீள்கோள வடிவத்தில்அலங்கரிக்கிறது. தலையில் கண்ணி மாலையுடன் கூடிய கரண்ட மகுடம் தாங்கியும், இரண்டு செவிகளில் குழைகளும், கழுத்தை சவடியும் (அட்டிகை) முத்துமணி ஆரமும் அணி செய்கிறது. மார்பில் கச்சையும், இடைமுதல் தொடைவரை அரையாடை அழகிய முடிச்சுகளான சுங்குகளுடன் அணிந்துள்ளாள். அருள் சுரக்கும் கண்களுடன் கொற்றவை காட்சியளிக்கிறாள்.
கொற்றவையின் வலது முன்கையில் கத்திரி முத்திரையில்
சக்கரம் ஏந்தியுள்ளாள்.
அடுத்தகரத்தில் நீண்ட வாளினைப் பற்றியுள்ளாள்.
அடுத்த கரத்தில் அம்பினைப் பற்றியுள்ளாள்.
முற்கரம் அபய முத்திரைக்காட்டியுள்ளது.
இடது முன்கரத்தில் கத்திரிமுத்திரையில் சங்கினை ஏந்தியுள்ளார்.
அடுத்துள்ள கையில் வில்லினை ஏந்தியுள்ளார்.
அடுத்த கரம் கேடயத்தைப் பற்றியுள்ளது.
இடது முன்கை தொடையைத் ( ஊரு ஹஸ்தம் ) தாங்கியும், மணிக்கட்டில் இச்சிற்பத்திற்கு அழகு சேர்க்கும் விதமாக கிளி ஒன்றும் அமர்ந்துள்ளது. இது தனித்துவம் மிக்கது.
சங்கு ஏந்திய மேற்கரத்தின் பின்புறம் அழகிய சூலம் காட்டப்பட்டுள்ளது.
மகிஷனின் (எருமை) தலை மீது நேர்கொண்ட நிலையில் காட்சியளிக்கிறாள். கொற்றவைக்குப் பின் ஒரு கலைமான் காட்டப்பட்டுள்ளது என்றார் ஆய்வாளர் சிங்கார உதியன்.
நெற்குணம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ரகோத்மன், நெற்குணம் சக்திவேல்.எஸ், சித்ரா, அ.பாரதி ஆகியோர் உடனிருந்தனர்.
தற்போது இப்புடைப்புச் சிற்பம் பாதுகாப்பு கருதி அருகில் உள்ள விநாயகர் கோவிலில் வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பழங் காலத்திலிருந்தே கொற்றவை வழிபாடு இருந்துள்ளது. கொற்றம் என்றால் வெற்றி என்று பொருள் – அவ்வை என்றால் உயர்ந்தவள் என்று பொருள். கொற்றவை வெற்றியை அருளும் தாய்.
போருக்குச் செல்லும் மன்னனும் வீரர்களும்
தமிழரின் மிகத்தொன்மை வாய்ந்த கொற்றவைத் தெய்வத்தின் முன் தங்களுடையப் போர்க் கருவிகளை வைத்துப்படையலிட்ட பின்பே போருக்குச் செல்வர் பிறகு வெற்றிவாகைச் சூடிய பிறகு இக் கொற்றவையின் முன் படையலிட்டு வழிபாடு செய்வார்கள்.
நடுநாட்டில் இவ்வகை போர்த்தெய்வமான கொற்றவை நடுகல் அதிகமாக உள்ளது.
400 ஆண்டு கால சோழர்களின் ஆட்சியிலும், 600 ஆண்டு காலப் பல்லவர்களின் ஆட்சிக்காலத்திலும் நடுநாட்டைச் சேர்ந்த போர்வீரர்கள் தான் அவர்களுக்கு உறுதுணையாகப் போருக்குச் சென்றனர், போருக்குச் செல்லும் முன் அவர்கள் வழிபட்டுச் சென்று வெற்றியும் பெற்றனர் அதனால் இப்பகுதியில் கொற்றவைத் தெய்வம் அதிகமாகக் காணப்படுகிறது.
V.ஜெய்ஷங்கர்
முதன்மை செய்தியாளர்
கள்ளக்குறிச்சி மாவட்டம்
