அக்டோபர் 7 :
வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் மோர்தானா அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று (அக்.7) அணையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அணையை சுற்றுலா தளமாக மாற்றுவதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். மேலும் விரைவில் மோர்தானா அணை சுற்றுலா தளமாக மாற்றப்படும் என்றும் அவர் கூறினார்.
அணை திறந்து பொதுமக்கள் வருகைக்கு திறந்தவுடன் தினசரி 3 பேருந்து சேவைகள் ஏற்படுத்தப்படும் என்றும், பொதுமக்கள் பாதுகாப்பிற்காக புறகாவல் நிலையம் அமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
🔹 மோர்தானா அணையின் விவரங்கள்:
மோர்தானா கிராமம், கௌண்டன்யா ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள மோர்தானா அணை 1990-ஆம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டு, 2001-ஆம் ஆண்டு நிறைவு பெற்றது.
அணை நீளம்: 475 மீட்டர்
அணை உயரம்: 11.50 மீட்டர் (37.73 அடி)
கொள்ளளவு: 261.360 மில்லியன் கனஅடி
பாசனப்பயன்: மொத்தம் 8,367 ஏக்கர் நிலங்கள்
மோர்தானா அணையிலிருந்து 4.5 கி.மீ தூரத்தில் ஜிட்டப்பள்ளியில் எடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து 4.2 கி.மீ நீளமான பொதுக்கால்வாயின் வழியாக நீர் வலதுபுற மற்றும் இடதுபுற பிரதான கால்வாய்களாகப் பிரிகிறது. இதன் மூலம் மொத்தம் 51 கிராமங்கள் மற்றும் 19 ஏரிகளுக்கு நீர் பாசனம் கிடைக்கிறது.
🔹 வரலாற்றுப் பதிவு:
அணை இதுவரை ஒன்பது முறை முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
இந்த ஆண்டு பத்தாவது முறையாக (24.09.2025) உபரிநீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
இன்று (07.10.2025 காலை 8.00 மணி நிலவரப்படி), அணை முழுக் கொள்ளளவை எட்டிய நிலையில், 460 கனஅடி நீர் ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.
🔹 ஆய்வில் கலந்து கொண்டவர்கள்:
அமைச்சருடன் வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, இ.ஆ.ப., குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் வி.அமுலு விஜயன், குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி, நீர்வளத்துறை பொறியாளர்கள் பவளக்கண்ணன், வெங்கடேஷ், வேலூர் மாநகராட்சி துணை மேயர் மா.சுனில்குமார், ஒன்றியக்குழு தலைவர்கள் என்.இ.சத்யானந்தம் (குடியாத்தம்), சித்ரா ஜனார்தனன் (பேர்ணாம்பட்டு), ரவிசந்திரன் (கீ.வ.குப்பம்), வே.வேல்முருகன் (காட்பாடி), குடியாத்தம் நகர்மன்ற தலைவர் சௌந்தரராசன், பேர்ணாம்பட்டு துணைத் தலைவர் ஆலியார் ஜுபேர் அஹ்மத் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
📍செய்தியாளர்: கே.வி. ராஜேந்திரன்
குடியாத்தம் தாலுக்கா