விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம்:
திண்டிவனம் காவல் துறை போலீசார் நடத்திய திடீர் சோதனையில், போதை மாத்திரைகள் விற்பனை செய்ய முயன்ற மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, 100 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
திண்டிவனம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மயிலம் ரோடு டீக்கடை அருகே சிலர் போதை மாத்திரைகள் விற்பனை செய்து வருகின்றனர் என்ற ரகசிய தகவல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி. சரவணன் (IPS) அவர்களுக்கு கிடைத்தது.
அவரின் உத்தரவின்பேரில் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் அவர்களின் மேற்பார்வையில், ஆய்வாளர் விஜயகுமார், உதவி ஆய்வாளர்கள் முருகானந்தம், ஐயப்பன் மற்றும் காவலர்கள் இணைந்து அப்பகுதியில் சோதனை நடத்தினர்.
அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த மூன்று இளைஞர்களை பிடித்து விசாரித்ததில், அவர்களிடம் போதை மாத்திரைகள், ஊசிகள் மற்றும் செலைன் வாட்டர் இருந்தது கண்டறியப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்கள்:
1. இளந்திரையன் (26) – வட ஆலப்பாக்கம், திண்டிவனம்
2. ராகுல் (24) – இந்திரா நகர், திண்டிவனம்
3. சூர்யா (23) – சின்ன முதலியார் தெரு, நாகலாபுரம்
மூவரையும் கைது செய்து திண்டிவனம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்:
போதை மாத்திரைகள் – 100
ஊசிகள் – 4
செலைன் வாட்டர் – 2
செல்போன்கள் – 5
போதைப்பொருள் விற்பனையை முற்றிலும் ஒழிக்க விழுப்புரம் மாவட்ட காவல் துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
V.ஜெய்ஷங்கர்
கள்ளக்குறிச்சி மாவட்டம் தலைமை செய்தியாளர்