அக்டோபர் 4 – வேலூர் மாவட்டம், குடியாத்தம்:
குடியாத்தம் அருகே உள்ள உள்ளிக்கூட்ரோடு பகுதியில் சுமார் 3 ஏக்கர் நிலப்பரப்பில் நகராட்சியின் குப்பை கிடங்கு அமைக்கப்பட்டு, அங்கு தற்போது குப்பைகள் தரம் பிரித்து சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், அதே இடத்தில் குடியாத்தம் நகரப்பகுதியிலிருந்து வரும் கழிவுநீரை சுத்திகரிக்கும் நிலையம் (Sewage Treatment Plant) அமைக்க மாவட்ட ஆட்சியர் வே. இரா. சுப்புலெட்சுமி தலைமையில் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி பொதுமக்கள் “கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டாம்” எனக் கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பித்தனர்.
மனுவை மேல்மூட்டுகூர் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர், கூடநகரம் ஊராட்சி தலைவர் குமாரன், சிங்கல்பாடி ஊராட்சி தலைவர் கஜேந்திரன் ஆகியோர் இணைந்து மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து வழங்கினர்.
அதனை பெற்ற ஆட்சியர், “மனுவில் கூறப்பட்ட விவரங்களை விசாரித்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.
மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
“உள்ளிக்கூட்ரோடு குப்பை கிடங்கு அருகே மேல்மூட்டுகூர், கூடநகரம், சிங்கல்பாடி, செருவங்கி, போஜனாபுரம், செட்டிகுப்பம் ஆகிய 6 ஊராட்சிகளில் சுமார் 40,000 குடும்பங்கள், 80,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
ஏற்கனவே குப்பைகள் தேக்கப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது, இதனால் குழந்தைகளுக்கு காய்ச்சல் மற்றும் தொற்று நோய்கள் பரவி வருகின்றன. இந்நிலையில் மீண்டும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தால் நிலத்தடி குடிநீர் மாசுபட்டு, குடிநீர் மூலம் நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. ஆகையால், இந்த நிலையம் அமைக்கப்படக்கூடாது” என மனுவில் கூறப்பட்டுள்ளது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்