Sun. Oct 5th, 2025

தென்காசியில் ஊரக வளர்ச்சித் துறை கூட்டமைப்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

தென்காசி, செப்டம்பர் 25:
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு, கூட்டமைப்பின் தலைவரும், தென்காசி மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் சங்கத் தலைவருமான ஆர். தங்கத்துரை தலைமையேற்றார். மாநில மக்கள் நலப் பணியாளர் சங்க பொதுச் செயலாளர் வே. புதியவன் முன்னிலை வகித்தார்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாநில துணைத்தலைவர் ஆர். ராமநாதன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.

முக்கிய கோரிக்கைகள்:

தூய்மை பணியாளர்களுக்கு மாத ஊதியம் ரூ.10,000 வழங்கல்.

மக்கள் நலப் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு.

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு மாத ஊதியம் ரூ.15,000.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 18 ஆண்டுகளாக பணிபுரியும் கணினி உதவியாளர்களுக்கு பணி நிரந்தரம்.

கிராம சுகாதார ஊக்குனர்களுக்கு ரூ.10,000 ஊதியம்.

தூய்மை காவலர்களுக்கு குடும்ப நல நிதி மற்றும் ரூ.5 லட்சம் உதவி.

ஊராட்சி செயலாளர்களுக்கு தேர்வு நிலை, சிறப்பு நிலை, தேக்கநிலை ஊதியம்.

கணினி உதவியாளர்களுக்கு மாத ஊதியம் ரூ.20,000 மற்றும் வேலை பாதுகாப்பு.

நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு ஓய்வூதியம் ரூ.5,000 மற்றும் பணிக்கொடை ரூ.1 லட்சம்.


தமிழக அரசு உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், வரும் அக்டோபர் 29ஆம் தேதி மாநிலம் முழுவதும் ஒருநாள் தற்செயல் விடுப்பு ஆர்ப்பாட்டம் நடத்தவும், நவம்பர் 24ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடவும் தீர்மானிக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ச. கந்தசாமி, மாவட்ட தலைவர் பி. தங்கத்துரை, மாநில இணைச் செயலாளர் ஆர். மாரியப்பன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

ஊராட்சி செயலாளர்கள், மக்கள் நலப் பணியாளர்கள், தூய்மை காவலர்கள், நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், கணினி உதவியாளர்கள், சுகாதார ஒருங்கிணைப்பாளர்கள், கிராம சுகாதார ஊக்குனர்கள் உள்ளிட்டோர் திரளாக பங்கேற்றனர்.

முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி. சக்திவேல் நன்றி தெரிவித்தார்.

அமல்ராஜ் – தென்காசி மாவட்ட தலைமை செய்தியாளர்

By TN NEWS