Sun. Oct 5th, 2025



திருநெல்வேலி:
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் சார்பதிவாளர் (பொறுப்பு) காட்டுராஜா மற்றும் கடலூர் மாவட்டம் வடலூர் சார்பதிவாளர் (பொறுப்பு) சுரேஷ் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலக ஊழியர்கள் இன்று (செப்.11) கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காட்டுராஜா மீது 21 சென்ட் நிலப் பதிவு குறித்த குற்றச்சாட்டு தொடர்பாக நெல்லை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில், அவர் கைது செய்யப்படாமல் விசாரணை மட்டுமே நடைபெற்று வந்தது. இருந்தபோதிலும் பதிவுத்துறை ஐஜி தினேஷ் ஆலிவர் பொன்ராஜ் அவரை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டார். அதேபோல் வடலூர் சார்பதிவாளர் (பொறுப்பு) சுரேஷும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நடவடிக்கை பதிவுத்துறை ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கடந்த ஓராண்டில் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், குற்றச்சாட்டில் சிக்கிய சில உயர் அதிகாரிகள் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த பிறகும், அவர்களின் சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்டு மீண்டும் முக்கிய இடங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளதாக ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும், பதிவுத்துறையில் சாதி சார்ந்த பாகுபாடுகள் நடைபெறுவதாகவும், அதனால் கீழ்மட்ட அதிகாரிகள் மட்டுமே நடவடிக்கைக்கு உள்ளாகின்றனர் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இதனை எதிர்த்து, தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலக ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றி தங்கள் கண்டனத்தை வெளிப்படுத்தினர். மாநில அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்காவிட்டால், மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என பதிவுத்துறை ஊழியர் சங்க நிர்வாகிகள் எச்சரித்துள்ளனர்.

அமல்ராஜ்
தென்காசி மாவட்டம் தலைமை செய்தியாளர்

By TN NEWS