Mon. Aug 25th, 2025



கார், பைக், பஸ் மோதிய விபத்து; பொதுமக்களின் உதவியுடன் மீட்பு

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே சிங்கிலிப்பட்டி பகுதியில் இன்று (25.08.2025) காலை பரபரப்பான விபத்து ஏற்பட்டது.

திருப்பூரில் இருந்து செங்கோட்டை நோக்கி பயணித்த அரசு பேருந்தை, செங்கோட்டைச் சேர்ந்த டிரைவர் மாரி (55) ஓட்டி வந்தார். பேருந்து சிங்கிலிப்பட்டி பாலம் அருகே வந்தபோது, எதிரே வந்த கார் மற்றும் இருசக்கர வாகனம் மோதியதால், பஸ் நேருக்கு நேர் மோதும் அபாயம் ஏற்பட்டது. அதைத் தவிர்க்க, அரசு பேருந்து சாலையோர புளியமரத்தில் மோதி நின்றது.

பயணிகள் காயம்

அந்த நேரத்தில் பேருந்தில் 45 பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர். இதில் 23 பயணிகள் மற்றும் எதிரே வந்த பைக்கில் சென்ற ஒருவர் என மொத்தம் 25 பேர் படுகாயம் அடைந்தனர்.

பத்துக்கும் மேற்பட்டோருக்கு கை, தலை, இடுப்பு, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

சொக்கம்பட்டி போலீசார் மற்றும் பொதுமக்கள் இணைந்து காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.


சிலர் அங்கு சிகிச்சை பெற்றனர். பலர் மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சிறிய அளவிலான காயமடைந்தவர்கள் புளியங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

போலீஸ் விசாரணை

இந்த விபத்துக்கான காரணம் குறித்து சொக்கம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் சென்று பார்வையிட்டு, விபத்தின் தன்மை குறித்து கேட்டறிந்தார்.

பொதுமக்களின் குற்றச்சாட்டு

புளியங்குடி அரசு மருத்துவமனையில் போதிய அளவில் செவிலியர்கள் இல்லாததால், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

📍 அமல்ராஜ் – மாவட்ட முதன்மை செய்தியாளர், தென்காசி

 

By TN NEWS