விவசாய நிலங்கள் அழிவு, மக்கள் உடல்நலம் பாதிப்பு குறித்து கிராம மக்களின் அதிரடி முடிவு
தென்காசி மாவட்டம் ஆண்டிப்பட்டியில், இயற்கை வள பாதுகாப்பு சங்கம் தலைமையில் நேற்று (24.08.2025) மாலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பூலாங்குளம் அருகே செயல்பட்டு வரும் தனியார் கிரஷர் குறித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
கிரஷர் செயல்பாட்டால் ஏற்பட்ட பாதிப்புகள்
24 மணிநேரமும் இயங்கும் கிரஷரில் இருந்து வெளியேறும் தூசி மற்றும் புழுதி விவசாய நிலங்களில் படிந்து, விளைச்சலை அழித்து வருகிறது.
மிளகாய், வெண்டை, கத்திரிக்காய் உள்ளிட்ட பயிர்கள் காய்ந்து அழிகின்றன.
கிராம மக்களுக்கு சுவாசக்கோளாறு, அரிப்பு போன்ற உடல்நலப் பிரச்சினைகள் அதிகரித்துள்ளன.
நான்கு ஆண்டுகளாக தொடரும் போராட்டம்
கடந்த நான்கு ஆண்டுகளாக விவசாயிகள் இந்த பிரச்சனையை எதிர்த்து போராடி வருகிறார்கள். சமீபத்தில் இயற்கை வள பாதுகாப்பு சங்கம் இந்த பிரச்சனையை கையில் எடுத்துள்ளது. விசாரணையில் பல விதிமீறல்கள் கண்டறியப்பட்டதால், சம்பந்தப்பட்ட கிரஷரை தென்காசி மாவட்ட நிர்வாகம் தற்காலிகமாக மூட உத்தரவிட்டது.
ஆனால், இந்நிறுவனம் மீண்டும் கிரஷரை இயக்க மாவட்ட நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
முற்றுகை போராட்டம் நடத்த தீர்மானம்
அந்த கிரஷர் மீண்டும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டால், அதைத் தடுக்கும் விதமாக இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தின் தலைமையில் –
பூலாங்குளம்,
அயோத்தியாபுரி,
இராமநாதபுரம்,
ஆண்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து, மாபெரும் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
“சட்டவிரோதமும், சுற்றுச்சூழல் பாதிப்பும் நிறைந்த இந்த கிரஷரை நிரந்தரமாக மூடி சீல் வைக்க வேண்டும்” என்பதே விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையாகும்.
📍 தென்காசி – அமல்ராஜ், மாவட்ட தலைமை நிருபர்