Thu. Mar 26th, 2026

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே சிந்தாமணியில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மிகுந்த சோகமும் பதற்றமும் நிலவுகிறது. நெல்கட்டும்செவல் கிராமத்தைச் சேர்ந்த மாரிச்சாமி–வேல்மகில் தம்பதியரின் ஒரே மகள் இசை யாழினி (4), யுகேஜி மாணவி, பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த கார் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

நேற்று மாலை பள்ளி நேரம் முடிந்தபோது, மாணவி பள்ளி மைதானத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது வேகமாக பள்ளிக்குள் நுழைந்த கார், குழந்தையை மோதியதாக தகவல். படுகாயமடைந்த யாழினி அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும், அவர் உயிரிழந்தார்.

இதற்கிடையில், மாணவி வீடு திரும்பாமல், புத்தகப்பை மட்டும் வந்ததை பார்த்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் சக மாணவிகள் கூறிய தகவலின் மூலம் விபத்து குறித்து அறிந்த பெற்றோர் மற்றும் கிராம மக்கள் உடனடியாக பள்ளிக்கு திரண்டனர்.

சாலை மறியல் – நீதிக்கான கோரிக்கை…!

குழந்தை உயிரிழப்புக்கு காரணமான கார் டிரைவரை உடனடியாக கைது செய்ய வேண்டும், சம்பவத்திற்கு பொறுப்பானவர்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, பொதுமக்கள் தென்காசி–மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 5 மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
“உயர் அதிகாரிகள் நேரில் வரும்வரை போராட்டம் தொடரும்” என உறுதியாக தெரிவித்தனர்.

பள்ளி மீது கற்கள் வீச்சு.

மாவட்ட ஆட்சித்தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் வராததால், போராட்டம் தீவிரமடைந்தது. நூற்றுக்கணக்கானோர் சம்பவம் நடந்த பள்ளிக்குச் சென்று, பள்ளி வளாகம், பெயர் பலகை, அருகிலிருந்த ஏடிஎம் மையம் மற்றும் மருத்துவமனை மீது கற்கள் வீசினர். போலீசார் தலையிட்டு கூட்டத்தை கலைத்தனர்.

பேச்சுவார்த்தை தோல்வி…!

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாதவன் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றும், உடன்பாடு ஏற்படாததால் மீண்டும் சாலை மறியல் தொடர்ந்தது.
இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு, வாகனங்கள் சுமார் 30 கிலோமீட்டர் சுற்றுப்பாதையில் மாற்றி விடப்பட்டன.

முக்கிய கேள்விகள்…?

பள்ளி வளாகத்திற்குள் கார் எவ்வாறு நுழைந்தது?

பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா?

பொறுப்புக்கூற வேண்டியவர்கள் யார்?

இந்த சம்பவம் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு குறித்து கடும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
குழந்தைக்கு நீதி கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே அதிகரித்துள்ளது.

சந்திர மோகன்

திண்டுக்கல் மாவட்டம்.

By TN NEWS