Mon. Mar 16th, 2026

பேரணாம்பட்டு, மார்ச் 14

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் வஜ்ரம் (கற்கள் தயாரிப்பு) தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் ரசாயன கலந்த கழிவு நீரால் அப்பகுதி பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கழிவு நீரால் சுகாதார பாதிப்பு:

மக்கள் பிரதிநிதிக்கு சொந்தமானதாக கூறப்படும் அந்த தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கழிவு நீர் அருகிலுள்ள ஏரி மற்றும் நீர்நிலைகளில் கலப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக ஏரியில் உள்ள மீன்கள் இறந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் தொழிற்சாலையிலிருந்து பரவும் கடும் துர்நாற்றம் மற்றும் ரசாயன வாயுக்கள் காரணமாக அப்பகுதி மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத் திணறல் போன்ற உடல்நல பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

குடிநீர் மற்றும் கால்நடைகளுக்கும் ஆபத்து:

ரசாயன கலந்த கழிவு நீர் ஏரிகளில் கலப்பதால், அந்த நீரை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடுகள் மற்றும் ஆஸ்துமா போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

அதேபோல் அந்த நீரை பருகும் கால்நடைகளும் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மிரட்டல் குற்றச்சாட்டு:

இச்சம்பவம் குறித்து தொழிற்சாலை நிர்வாகத்திடம் பொதுமக்கள் கேள்வி எழுப்பினால், தொழிற்சாலை உரிமையாளர் தனது ஆதரவாளர்களை பயன்படுத்தி மிரட்டுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை:

இந்த பிரச்சினை குறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்து, பொதுமக்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர்
கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS