Mon. Mar 2nd, 2026

வேலூர், பிப்ரவரி 2:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த என்.இ. சத்யானந்தம், திமுக குடியாத்தம் ஒன்றிய செயலாளராக இருந்து, கடந்த உள்ளாட்சி தேர்தலில் கொண்டசமுத்திரம் ஒன்றிய வார்டில் வெற்றி பெற்று பின்னர் ஒன்றிய குழு தலைவராக பதவி வகித்து வருகிறார்.

குடியாத்தம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 50 ஊராட்சிகளில் நடைபெறும் வளர்ச்சி திட்டப் பணிகளில், ஒப்பந்ததாரர்களிடம் 12 முதல் 15 சதவீதம் வரை கமிஷன் கேட்டு வந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், ஆன்லைன் டெண்டர் மூலம் ‘பீம் ஜி’ நிறுவனம் கொண்டசமுத்திரம் பகுதியில் கழிவுநீர் கால்வாய் கட்டுமானப் பணிக்கான ஒப்பந்தத்தை பெற்றுள்ளது. இதற்காக கமிஷன் கேட்டதாகவும், பணம் வழங்க மறுத்ததால் ஒப்பந்ததாரரை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதில் ஏற்பட்ட தகராறில், ஒன்றிய குழு தலைவர் சத்யானந்தம் அரசுக்கு சொந்தமான வாகனத்தில் தனது ஆதரவாளர்களுடன் சம்பவ இடத்துக்கு சென்று, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களை ஜாதிப் பெயரை குறிப்பிடித் திட்டி, தாக்கி, பணியை நிறுத்தியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் காயமடைந்த ஆகாஷ் என்பவர் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஒப்பந்த நிறுவனத்தின் புகாரின் பேரில், குடியாத்தம் டவுன் போலீசார் சத்யானந்தம் உள்ளிட்டோர் மீது எஸ்.சி/எஸ்.டி (அதிகார மீறல் தடுப்பு) சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பிரேம்குமார், ராஜ்கமல், சதீஷ்குமார், ஜீவா ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனர். ஒன்றிய குழு தலைவர் சத்யானந்தத்தை போலீசார் தேடி வருகின்றனர்.

கே.வி. ராஜேந்திரன்
தாலுகா செய்தியாளர், குடியாத்தம்

By TN NEWS