சின்னமனூர் | ஜன.30
தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணய்யர் மேல்நிலைப் பள்ளியில், மகாத்மா காந்தி நினைவு தினமான ஜனவரி 30-ஆம் தேதி தீண்டாமை ஒழிப்பு தினமாக கடைப்பிடிக்கப்பட்டது. இதனையொட்டி தீண்டாமை ஒழிப்பு மற்றும் தொழுநோய் விழிப்புணர்வு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் திரு. சே. பாண்டித்துரை தலைமை வகித்து பேசுகையில்,
“மாணவர்களே, நீங்கள் தான் வருங்கால இந்தியாவின் தூண்கள். பாட அறிவைத் தாண்டி மனிதநேயமும் சமத்துவமும் வாழ்க்கை மதிப்புகளாக மாற வேண்டும். காந்தியடிகள் கனவுகண்ட சமத்துவ பாரதத்தை உருவாக்குவது உங்கள் பொறுப்பு,” என்றார்.
தீண்டாமை ஒழிப்பு குறித்து ஆசிரியை திருமதி வே. ஜெயபாரதி,
“தீண்டாமை வெளிப்படையான செயல்களிலேயே அல்ல; எண்ணத்திலும் வார்த்தையிலும் கூட இடம் பெறக் கூடாது. ஒருவரை ஒதுக்குவது கூட தீண்டாமையின் வடிவமே,” என அறிவுறுத்தினார்.
தொழுநோய் விழிப்புணர்வில் பட்டதாரி ஆசிரியர் திரு. வெ. சண்முகநாதன்,
“தொழுநோய் சாபமல்ல; ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் முழுமையாக குணமாகும். நோயாளிகளை அஞ்சாமல் அரவணைக்க வேண்டும்,” என்று விளக்கினார்.
முதுகலை ஆசிரியை டாக்டர் திருமதி சே. சத்யநாச்சியார் வழிநடத்திய உறுதிமொழியில், நோயற்ற, பேதமற்ற சமூகத்தை உருவாக்க மாணவர்கள் உறுதி எடுத்தனர்.
செய்தித் தொகுப்பு:
அன்பு பிரகாஷ்,
தலைமைச் செய்தியாளர், தமிழ்நாடு டுடே, தேனி மாவட்டம்.





