கள்ளக்குறிச்சி மாவட்டம் – சங்கராபுரம் அருகே
பள்ளி மாணவர்கள் குறிவைப்பு – பெற்றோர், பொதுமக்கள் அச்சம் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள அரசம்பட்டு கிராமத்தில் கடந்த இரண்டு நாட்களில் தெரு நாய்கள் கடித்ததில் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் பெரும்பாலானோர் பள்ளி மாணவர்கள் என்பது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அரசம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். கடந்த நேற்று முன்தினம், பள்ளி முடிந்து வீட்டிற்குச் சென்ற 4 மாணவர்களை அப்பகுதியில் சுற்றித் திரிந்த தெரு நாய்கள் துரத்திச் சென்று கடித்ததாக கூறப்படுகிறது. உடனடியாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
இதனைத் தொடர்ந்து, நேற்று (23ம் தேதி) மதியம் 1.00 மணியளவில், அரையாண்டுத் தேர்வு முடிந்து வீட்டிற்குச் சென்ற மேலும் 8 மாணவ, மாணவிகளை தெரு நாய்கள் கடித்தன. இதனால் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாகவே அரசம்பட்டு கிராமத்தில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களிடம் புகார் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நாய்களின் தொல்லையால் பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கூட அச்சத்துடன் தெருக்களில் நடந்து செல்லும் நிலை நீடித்து வருகிறது. பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ள நிலையில், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
எனவே, அரசம்பட்டு கிராமத்தில் சுற்றித் திரியும் தெரு நாய்களை பிடித்து அப்புறப்படுத்தவும், இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் நிரந்தர தீர்வு காணவும் மாவட்ட நிர்வாகம், ஊராட்சி மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம்
V. ஜெய்சங்கர்
தமிழ்நாடு டுடே
மக்கள் தொடர்பு அதிகாரி
