Sat. Dec 20th, 2025



விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள கொண்டசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த செந்தில் ஜெயந்தி (35) என்பவர், தனது வீட்டின் முன்புறம் பாதுகாப்பு கருதி சிசிடி கேமரா பொருத்தியிருந்தார்.

இதே கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் சிலம்பரசன் (28) என்பவர் அருகிலேயே வசித்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, சிலம்பரசனின் உறவினரான அய்யாக்கண்ணு என்பவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த இளையராஜா என்பவருக்கும், ஜெயந்தி வீட்டின் முன்பாக வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அதில் தள்ளுமுள்ளு சம்பவம் நடந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம், அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடி கேமராவில் பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், சம்பவம் சிசிடி கேமராவில் பதிவாகியுள்ளதா என்பதை அறிய சிலம்பரசன் ஜெயந்தி வீட்டிற்கு சென்று விசாரித்துள்ளார். பின்னர், இரவு நேரத்தில் அவர் சிசிடி கேமராவை சேதப்படுத்தி உடைத்ததாக கூறப்படுகிறது.

அடுத்த நாள் காலை, சிசிடி கேமரா ஏன் உடைக்கப்பட்டது என ஜெயந்தி கேட்டபோது, சிலம்பரசன் அவரை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, ஜெயந்தி திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில், திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். விசாரணையின் முடிவில், சிலம்பரசன் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த சம்பவம், கிராமப்புறங்களில் ஏற்படும் சிறிய தகராறுகள் எவ்வாறு சட்டப் பிரச்சினைகளாக மாறுகின்றன என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம்
V. ஜெய்சங்கர்
தமிழ்நாடு டுடே
மக்கள் தொடர்பு அதிகாரி

By TN NEWS