
500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!
பாபரி மஸ்ஜித் இடிப்பு தினமான பாசிச எதிர்ப்பு தினத்தை (டிச.06) முன்னிட்டு, வக்ஃப் மற்றும் வழிபாட்டு உரிமையை காப்போம் என்கிற முழக்கத்துடன் தமிழகம் உள்பட நாடு முழுவதும் எஸ்டிபிஐ கட்சி சார்பாக பெருந்திரள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதன் ஒருபகுதியாக தென்காசி மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக சங்கரன்கோவில் கழுகுமலைரோடு பள்ளிவாசல் அருகில் வைத்து எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட தலைவர் திவான்ஒலி தலைமையில் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நகர செயற்குழு உறுப்பினர் அப்துல் நசீர் வரவேற்புரையாற்ற, நகரதலைவர் பீர்மைதீன் நன்றியுரையாற்றினார். நிகழ்ச்சியை நகர செயலாளர் அஜிர்உசேன் தொகுத்து வழங்கினார். மேலும், மாவட்ட பொதுச்செயலாளர் செய்யதுமஹ்மூத், மாவட்ட செயலாளர் நூர் முகம்மது,வர்த்தகர் அணி மாவட்ட தலைவர் முகம்மது கனி, மாவட்ட இணைச்செயலாளர் பீர்முகம்மது,நகர துணைத்தலைவர் அபுதாஹிர்,இணைச்செயலாளர் ஹாரூன், ஜமீன், நகர பொருளாளர் அப்துல்அஜீஸ், நகர செயற்குழு உறுப்பினர்கள் மீராசாஹிப், முகம்மது இப்ராஹிம், ராஜாமுகம்மது,தென்காசி தொகுதி தலைவர் பீர் முகம்மது, தொகுதி துணைத்தலைவர் பாதுஷா, கடையநல்லூர் தொகுதி தலைவர் ஹக்கீம்சேட், தொகுதி செயலாளர் ஷாஜித்அலி, ஆலங்குளம் தொகுதி தலைவர் விஸ்வா ஹாஜா, தொகுதி செயலாளர் அப்துல்அஜீஸ், சங்கரன்கோவில் தொகுதி தலைவர் நிஷார்முகம்மது, தொகுதி செயலாளர் ஜமீன்ரியாஸ், வாசுதொகுதி தலைவர் அப்துல்ஹமீது, தொகுதி செயலாளர் முசாபர்அஹமதுஉள்ளிட்ட மாவட்ட மற்றும் தொகுதி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட திமுக வடக்கு மாவட்ட செயலாளர்,சங்கரன்கோவில் சட்டமன்றஉறுப்பினர் ராஜா M.L.A., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துபாண்டியன்,விடுதலை சிறுத்தைகள் வடக்கு மாவட்ட செயலாளர் லிங்கவளவன், எஸ்டிபிஐ கட்சி மாவட்ட பொருளாளர் யாசர்கான் M.C., ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி உரை நிகழ்த்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநில பேச்சாளர் பிலால்தீன் பேசுகையில், “1992 டிசம்பர் 6 அன்று அயோத்தியில் நிகழ்ந்த அந்த பாபரி மஸ்ஜித் தகர்ப்பு என்பது வெறும் கட்டட இடிப்பு மட்டுமல்ல; அது இந்திய அரசியலமைப்பின் ஆன்மாவையே தாக்கிய பயங்கரவாதச் செயலாகும். இடிக்கப்பட்டது ஒரு பள்ளிவாசல் மட்டுமல்ல – மதச்சார்பின்மை, சிறுபான்மையினர் பாதுகாப்பு, வழிபாட்டு உரிமை, சட்டத்தின் ஆட்சி, ஜனநாயகம் ஆகிய அனைத்தும் ஒருசேரத் தரைமட்டமாக்கப்பட்டன. எனினும் அந்த அநீதிக்கு நீதி என்பது கிடைக்கவில்லை. மாறாக ஆதாரங்களை புறக்கணித்து பெரும்பான்மை மனச்சாட்சி அடிப்படையில் சட்டத்திற்கு எதிராக தீர்ப்பு எழுதப்பட்டது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் நீதித்துறை, சர்வதேச அளவில் கேலிக்குரியதாக மாறியது.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவை சாதகமாக்கிகொண்ட மதவாத சக்திகள் இன்றைக்கு கியான்வாபி, மதுரா ஷாஹி ஈத்கா, டெல்லி ஜாமா மஸ்ஜித் எனப் பல நூற்றாண்டு பழமையான மஸ்ஜிதுகளை இலக்காக்கி அடுத்த கட்ட நடவடிக்கையைத் தொடங்கிவிட்டன. மறுபுறம் ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள வக்ஃப் (திருத்த) மசோதா, முஸ்லிம் சமூகத்தின் பாரம்பரிய உரிமைகளையே பறிக்கும் முயற்சியாக, வக்ஃப் சொத்துகளை அரசு எளிதில் கைப்பற்றவும், அவற்றின் மீதான முஸ்லிம்களின் கட்டுப்பாட்டை அற்றுப்போகச் செய்யவும் சட்டம் இயற்றியுள்ளது.
மதச்சார்பின்மை எனும் அரசியலமைப்பு உத்தரவாதத்தை மெல்ல மெல்ல அரித்து இல்லாமலாக்கும் சதிச்செயல்கள் நடந்துகொண்டிருக்கின்றன. சிறுபான்மையினர் பாதுகாப்பு என்பது வெறும் சட்டப் பிரிவுகள் அல்ல – அது இந்தியத் தேசியத்தின் அடித்தளம். அதைத் தகர்த்தால் இந்தியா என்ற கட்டமைப்பே சிதறிவிடும்.
எனவே சட்டத்தின் நீதியும், அமைதி நல்லிணக்கம் நிலைபெறவும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை மீறும் எந்த முயற்சியையும் எதிர்க்க வேண்டும், வக்ஃப் உரிமைகளைக் காக்க வேண்டும், மதச்சார்பின்மையை அரசியலமைப்பின் உயிர்நாடியாக மீட்டெடுக்க வேண்டும்.” என வலியுறுத்தினார்.
இந்த மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, வக்ஃப் மற்றும் வழிபாட்டு உரிமையை காக்க முழக்கமிட்டனர்.
அமல்ராஜ்
தலைமை செய்தியாளர்
தென்காசி மாவட்டம்.
